Published:Updated:

மழை: சாபமல்ல, வரம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

மழை என்பது வளத்தின் அடையாளம். மண்ணை உயிர்த்தெழ வைக்கும் ரசவாதம். மழையை உற்சாகமாக வரவேற்கும் மனம் முன்பு நமக்கு இருந்தது. இப்போதோ, மழை வந்தாலே பயம் வருகிறது. இந்தத் தலைமுறையைப் பொறுத்தவரை மழை வந்தால், வீட்டுக்குள் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வரும்; மின்சாரம் துண்டிக்கப்படும்; சாலைகள் வெள்ளக்காடாகும்; வாகனங்கள் பழுதாகும்; போக்குவரத்து நிலைகுலைந்துபோகும். அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்புவது எப்போது என்பது கேள்விக்குறியாகும்.

மழை என்பது வரம். இப்போதோ அது சாபத்தைப்போல பார்க்கப்படுகிறது. காரணம், பருவநிலை மாற்றத்தால் தாறுமாறாக மழை பெய்வதுதான். 2021-ல் மட்டும் சென்னையில் நான்கு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் பெய்த மழையின் அளவு வழக்கத்தைவிட 47 சதவிகிதம் அதிகம். சென்னையே வெள்ளத்தில் மிதந்த 2015-ம் ஆண்டு பெய்ததைவிட அதிக மழை 2021-ம் ஆண்டு பெய்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் புயல், மழை போன்றவற்றைத் துல்லியமாகக் கணிப்பது மேலும் சவாலாகியிருக்கிறது என்பது உண்மையே. எனினும், சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வசிக்கும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு இப்படி ஒரு பெருமழை வரப்போகிறது என்று நம் வானிலை ஆராய்ச்சி மையத்தால் முன்கூட்டியே கணித்துச் சொல்லமுடியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. இது முதல்முறையல்ல. நவம்பர் மாத மழையின்போதே, ரேடார் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், `பெருமழையை ஏன் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை’ என்ற கேள்விக்கு, `மழைப்பொழிவைத் துல்லியமாகக் கணிக்க, நவீனக் கருவிகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன’ என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் காரணம் சொல்லியிருக்கிறார்கள்.

மழை: சாபமல்ல, வரம்!

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் மத்திய அரசுக்கு இதுகுறித்துப் பல கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறார்கள். ``பெருமழை, புயல் போன்ற `ரெட் அலர்ட்’ சூழ்நிலைகளைத் துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும்’’ என்று தமிழகம் வைத்திருக்கும் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் `கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்’ என்று குற்றம் சுமத்தும் முதல்வர் ஸ்டாலின், `எங்கே தவறு நடந்தது. எப்படித் தவறு நடந்திருக்கிறது. இந்தத் தவற்றைச் செய்தவர்கள் யார், யார்’ என்று கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய அரசையே குறை சொல்லிக்கொண்டு இருக்காமல், தாங்கள் பதவிக்கு வந்து ஏழு மாதங்களுக்கும் மேலாகிறது என்பதையும் அவர் உணர வேண்டும்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினர், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சென்னையில் வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டத்திற்கான இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள். சென்னையில் மழை நீர் வடிகால்களை அகலப்படுத்துவதுடன் ஆழப்படுத்த வேண்டும், புறநகர்ப் பகுதிகளில் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உயரத்தில் இருக்கும் மழைநீர் வடிகால் கால்வாய்களை சமப்படுத்த வேண்டும் என்று பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது அந்த அறிக்கை. இத்தகைய பணிகளை உடனே தொடங்கவேண்டும்.

அடுத்து வரும் மழை சென்னைக்கு இனிய அனுபவமாக இருக்கவேண்டுமே தவிர இன்னலாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வது இந்த அரசின் கடமை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz