Published:Updated:

அடக்கப்பட வேண்டிய ஆன்லைன் ஆபத்து!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

அடக்கப்பட வேண்டிய ஆன்லைன் ஆபத்து!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
ன்லைன் சூதாட்டங்களைப் போலவே ஆபத்தான இன்னொரு விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் விரிக்கப்படும் மோசமான கடன் வலைதான் அது. இந்த வலையிலிருந்து மீள முடியாமல் அவமானத்தில் ஐந்தாறு பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி நம்மைப் பதைபதைக்க வைக்கிறது.

கொரோனாச் சூழல் காரணமாகப் பண நெருக்கடியில் தவிக்கும் எளிய மனிதர்களைக் குறிவைத்து இந்த வலை விரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சீனாவிலிருந்து சிலர் வந்து இங்கு தங்கியுள்ளனர். தங்கள் சட்டவிரோதச் செயல்களுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சென்னை மாநகர காவல்துறை எடுத்த நடவடிக்கையின் மூலம் இந்த ஆபத்தான கோர முகம் தெரிய வந்திருக்கிறது. விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்த சீனர்களான ஜியா ய மாவ், யுவான் லூன் ஆகியோரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர் காவல் துறையினர்.

அடக்கப்பட வேண்டிய ஆன்லைன் ஆபத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்கள் பெங்களூரில் இருந்தபடி, இந்தியாவைச் சேர்ந்த சிலரை வேலைக்கு எடுத்து, அவர்களின் பெயரில் நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர். நிறுவனம் இந்தியர்கள் பெயரில் இருக்கும். ஆனால் பணத்தைக் கையாள்வதோ சீனர்கள். இந்த நிறுவனங்கள் மூலம் உடனடி கடன் செயலிகள் உருவாக்கப்பட்டு, அவை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கடன் செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு ஒருவர் கடன் பெறலாம். கடன் தருவதற்காக இந்த நிறுவனங்கள் தனியாக கால் சென்டர்களும் நடத்தின. இப்படி சுமார் 2 லட்சம் பேருக்கு அதிக வட்டிக்கு குறுகிய காலக் கடன் கொடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வாரா வாரம் கடனை வட்டியுடன் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டும். கந்துவட்டியைவிட மிக மோசமான வட்டி வசூலித்திருக்கின்றனர். ஒரு வாரம் பணம் கட்டவில்லை என்றாலும், போன் செய்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்த இவர்கள் இன்னொரு மோசமான செயலிலும் இறங்கினர். இந்தக் கடன் செயலியை ஒருவர் தன் போனில் பதிவிறக்கம் செய்யும்போதே, அவரது போனில் இருக்கும் கான்டாக்ட் விவரங்கள் இந்த நிறுவனங்களின் கைக்குப் போய்விடும். ‘இவர் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்’ என அந்த எண்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். அப்படி மெசேஜ் வந்ததும் நண்பர்கள், உறவுகள் விசாரித்தபோது, கடன் வாங்கிய பலரும் கூனிக் குறுகிவிட்டனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட உளவியல் சித்திரவதை இது. இதைத் தாங்க முடியாமல் சிலர் தற்கொலை முடிவு எடுத்துள்ளனர். பல மாநிலங்களில் இது நிகழ்ந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 25-க்கும் மேற்பட்ட சட்டவிரோத கடன் செயலிகளை நீக்குவதற்கு சென்னை மாநகரக் காவல்துறை முயற்சி எடுத்துவருகிறது.

வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இந்தியாவில் கடன் வலை விரிக்க முடிந்தது எப்படி, இந்தியாவின் கடன் சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ள இந்தச் செயலிகளை கூகுள் நிறுவனம் எப்படி அனுமதித்தது எனப் பல கேள்விகள் எழுகின்றன. உடனடியாக மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி இந்தச் செயலிகளைத் தடை செய்வதுடன் எதிர்காலத்தில் இப்படியான மோசடிகள் நடைபெறாதவகையில் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். இந்தக் கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உள்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism