பிரீமியம் ஸ்டோரி

கொரோனா குறித்த முடிவுகளில் தமிழக அரசு தடுமாறுகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம், ‘திரையரங்குகள் 100 சதவிகித இருக்கை வசதியுடன் செயல்பட அனுமதி' என்ற அறிவிப்பு.

‘பள்ளிகளைத் திறக்கவே அரசு இன்னும் அனுமதி கொடுக்காத நிலையில், திரையங்குகளை நூறு சதவிகித இருக்கை வசதியுடன் செயல்பட அனுமதிப்பது ஏன்’ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. மருத்துவர்கள் தரப்பிலும் எதிர்ப்பு வலுத்தது. ‘கொரோனா ஏற்படுத்திய பணிச்சுமையால், ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் இதனால் சோர்வடைந்துள்ளனர். பெருந்தொற்று காலம் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் நூறு சதவிகித இருக்கை பயன்பாட்டுக்கு அனுமதி தருவது தற்கொலை முயற்சி. இன்னும் சொல்வதானால் அது படுகொலை. அணைந்துகொண்டிருக்கும் நெருப்பை ஊதிப் பெருந்தீ ஆக்குவதைத் தவிர்க்க வேண்டும்' என மருத்துவர் ஒருவர் எழுதிய சமூகவலைத்தளப் பதிவு, ஒட்டுமொத்த கொரோனா முன்களப் பணியாளர்களின் குரலாக ஒலித்தது.

எதிர்ப்புகள் எழுந்தபின்னும் தமிழக அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராக இல்லை. இறுதியாக மத்திய அரசு தலையிட்டு, ‘கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிகளின்படி, நூறு சதவிகித அனுமதி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று' என்று அறிவுறுத்தியது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அரசின் முடிவைக் கேள்வி எழுப்பி நீதிமன்றம் தடை செய்தது. இந்த இரண்டு நெருக்கடிகளால் மட்டுமே அவசர அவசரமாகத் தன் முடிவைத் திரும்பப் பெற்றிருக்கிறது தமிழக அரசு.

அக்கறை முடிவுகளே அவசியம்!

இதுபோலவே கல்வி தொடர்பான முடிவுகளிலும் அரசின் தடுமாற்றங்கள் தொடர்கின்றன. ஏற்கெனவே ‘அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்ச்சி', ‘அரியர் தேர்வுகளிலும் தேர்ச்சி' என்ற தமிழக அரசின் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் நடைபெறுகின்றன. அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலும் பல்கலைக்கழக மானியக்குழுவும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் ‘இந்தக் கல்வியாண்டு பூஜ்ய ஆண்டு இல்லை. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு உண்டு' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பொதுத்தேர்வுகளை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்விக்குத் தமிழக அரசிடம் எந்தப் பதிலும் இல்லை. இப்போது ‘பள்ளிகளைத் திறக்கலாமா?' என்று பெற்றோர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டுவருகிறது.

ஒரு பெருந்தொற்று அச்சுறுத்தும் காலத்தில், இதுபோன்ற முடிவுகளை அரசியல் லாபங்களை எதிர்பார்த்து எடுப்பது சரியல்ல! உரிய நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டே எடுக்க வேண்டும். மருத்துவக்குழுவின் பரிந்துரைகளைப் புறக்கணித்துவிட்டே தியேட்டர் அனுமதி விஷயத்தில் அரசு செயல்பட்டது. பள்ளிகளைத் திறக்கும் முயற்சியிலாவது மருத்துவக்குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு பின்பற்ற வேண்டும். அனைவரின் நலன் குறித்த அக்கறை கலந்ததாகவே எந்த முடிவும் இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு