Published:Updated:

தேவை நிதானம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தேவை நிதானம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘அமைச்சராக இருக்கும்போது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 3.1 கோடி ரூபாய் அளவுக்குப் பலரை ஏமாற்றினார்’ என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜிமீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளே மறையும் அளவுக்கு தமிழக அரசு ஆத்திரத்துடனும் அவசரத்துடனும் செயல்பட்டு, தனக்குத்தானே அவப்பெயரைத் தேடிக்கொண்டிருக்கிறது.

ஏராளமான செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்தி, பல தனிப்படைகளை அமைத்து, எட்டுத் திக்கிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக போலீஸாருக்கு ராஜேந்திர பாலாஜி இரண்டு வாரங்களுக்கும் மேல் ‘தண்ணி’ காட்டினார். இதனால் நிதானம் இழந்த போலீஸார் துரிதகதியில் செயல்பட்டு ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் வளைத்துப் பிடித்து, அவர் சிக்கிவிட்டதாக நிம்மதி அடைந்தார்கள். ஆனால், உண்மையில் சிக்கியது தமிழக போலீஸ்தான் என்பது உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகளில் புரிந்தது.

`உங்கள் நடவடிக்கைகளில் அரசியல் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கம் இருக்கிறதா?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பும் அளவுக்கு தமிழக போலீஸார் கெட்ட பெயர் வாங்கினார்கள்.

`ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நுழைந்து போலீஸார் சோதனை நடத்தியது சட்டத்துக்குப் புறம்பானது’ என்று தமிழக பார் கவுன்சில் கண்டனத்துக்கும் தமிழக அரசு ஆளானது. `தமிழ்நாடு ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவருகிறது’ என்ற குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒலிக்கவும் இது களம் அமைத்துக் கொடுத்தது.

`ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில், ஒரு நாள் முன்னதாகவே அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒரு நாள் காத்திருந்தால் வானம் இடிந்து தலையில் விழுந்துவிடுமா?’ என்று உச்ச நீதிமன்றம் கடுகடுத்திருக்கிறது. அந்த அளவுக்கு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இந்த வழக்கின் போக்கைத் தன் அதீத அவசரத்தால் மடை மாற்றிவிட்டது தமிழக அரசு.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு தொடர்பான ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு அவப்பெயர் வாங்கியிருக்கிறது இந்த அரசு. பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி இருந்ததாக திருத்தணியைச் சேர்ந்த நந்தன் என்பவர் குற்றம் சுமத்தினார். அவர்மீது ‘அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்’ என்று ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது போலீஸ். இதைத் தொடர்ந்து அவர் மகன் குப்புசாமி என்பவர் தீக்குளித்து இறந்தார். வழக்கு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியே அவர் தீக்குளித்து இறந்ததாக அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர்.

சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் பலர்மீதும் அவசர வழக்குகள் பதியப்படுகின்றன. ‘அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தால் வழக்கு பாயும்’ என்ற நிலையை உருவாக்குவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. தேவை நிதானம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism