‘தீமையிலும் நன்மை’ உள்ளதுபோல, கொரோனாவின் கோரத்தாண்டவத்திலும் ஒரு நன்மை நடந்துள்ளது. கல்யாணம், காதுக்குத்து… என முக்கியமான காலங்களில் மட்டுமே சொந்த ஊர் பக்கம் எட்டிப்பார்த்தவர்களை மாதக் கணக்கில் அங்கேயே தங்க வைத்துள்ளது, கொரோனா.
ஒரு சிலர் நகரத்தில் வாழ்ந்த நரக வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிட்டு, நிரந்தரமாகக் கிராமத்திலேயே தங்கி, ‘இயற்கை விவசாயம் செய்து தற்சார்பு வாழ்க்கை வாழப்போகிறோம்’ எனப் புறப்பட்டுள்ளனர். சுகாதாரமான சூழல், சுதந்திரமான வாழ்க்கை… எனக் கிராமம்தான் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஏற்ற இடம்.
ஆனால், ஊருக்குச் சென்றவுடன், ‘நானும் இயற்கை விவசாயம் செய்யப்போகிறேன்’ என உணர்ச்சி வசப்பட்டுப் புகைப்படம் எடுத்து, அதைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்தால், பாராட்டுகள் வேண்டுமானால் கிடைக்கும். உடனடி பலன் கிடைக்காது.
ஆம், கழனியில் கால் வைக்கும் முன்பு கள நிலவரத்தைக் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அந்த மண்ணில் என்ன விளையும், எங்கு விற்பனை செய்ய முடியும், நாம் சாகுபடி செய்யும் விளைபொருள் சந்தைக்கு வரும்போது, என்ன விலைக்கு விற்பனையாகும் போன்ற அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.
மேலும், பருவம் பார்த்து விதைப்பது, பயிர் பாதுகாப்பு, பாசனம், பருவநிலை… எனப் பலவற்றையும் அலசி ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியம். பரம்பரை விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தலைமுறை இடைவெளியால், முன்னோர்களின் பாரம்பர்ய பயிர் சாகுபடி பாடம் மறந்துபோயிருக்கலாம். அக்கம், பக்கம் உள்ள முன்னோடி விவசாயிகளின் பண்ணைகளுக்கு நேரில் சென்று பாருங்கள். அந்த விவசாயிகள் சொல்லும் அனுபவப் பாடங்கள், நீங்கள் நஷ்டப்படாமலிருக்க நல்வழிகாட்டியாக இருக்கும்.
மற்ற தொழில்களைப்போல முறையாகத் திட்டமிட்டுச் செய்தால்தான், விவசாயம் லாபகரமானதாக இருக்கும். இதற்கு உழுதவன் கட்டாயம் கணக்கு பார்க்க வேண்டும். கணக்கு என்றால், வருமானம் மட்டுமல்ல; வெற்றிகரமான விவசாயத்துக்கு உதவும் அத்தனை காரணிகளையும் சிறப்பாக கணித்து உழுதுண்டு வாழ்வது; இதைச் செய்தால்தான் ‘உழவே தலை’யாகும்.
-ஆசிரியர்