Published:Updated:

செயல்பட வேண்டும் எதிர்க்கட்சி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

செயல்பட வேண்டும் எதிர்க்கட்சி!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஜனநாயகத் தராசில் ஆளுங்கட்சிக்கு இணையான ஓர் அந்தஸ்தை எதிர்க்கட்சிக்கும் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் அரசியல் சாசனத்தின்படியான சில முக்கியப் பதவிகளுக்குத் தகுதியானவர்களை ஆளுங்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து தேர்வு செய்யும் நடைமுறை நம் நாட்டில் இருக்கிறது.

ஓர் ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு வலிமையான ஆளுங்கட்சி எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல எதிர்க்கட்சியும் அவசியம். `எந்த அளவுக்கு ஜனநாயகத்தன்மையுடன் ஆட்சி இருக்கிறது என்பதை, அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள், அதிலும் முக்கியமாக பிரதான எதிர்க்கட்சி எந்த அளவுக்கு பலமானதாக இருக்கிறது என்பதை வைத்துதான் முடிவு செய்ய இயலும்' என்பார்கள். இதைச் சொல்வதற்குக் காரணம், தமிழ்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் இப்போது அரங்கேறி வரும் விரும்பத்தகாத நிகழ்வுகள்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 65 எம்.எல்.ஏ-க்களைக் கொடுத்து முதன்மை எதிர்க்கட்சியாக அ.தி.மு.க-வை அமர்த்தி அழகு பார்த்தார்கள் தமிழக மக்கள். அந்தக் கட்சிக்குள் இப்போது நடைபெறும் அதிகார மோதல்கள் கவலை தருகின்றன.

இரட்டைத் தலைமையால் கட்சி இயல்பாக இயங்க முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ஒற்றைத் தலைமைக்கு மாற முயன்றபோது குழப்பம் ஆரம்பித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு, நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சியாக நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியபிறகு பொதுக்குழுவை நடத்தி முடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற அந்தப் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியைக் காலாவதி ஆக்கிவிட்டு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வாகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கூடவே,

ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். கட்சி நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் பல்வேறு அதிகாரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியுள்ளது பொதுக்குழு.

பொதுக்குழு நடந்த அதே நேரத்தில் திடீரென அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கே இருதரப்பினருக்கும் மோதல் நடைபெற, அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு செய்திருக்கிறார். இன்னொரு பக்கம் சசிகலாவும் கட்சியில் நிகழ்ந்திருக்கும் நிர்வாக மாற்றத்தை விமர்சனம் செய்திருக்கிறார்.

அ.தி.மு.க கடந்த 50 ஆண்டுகளில் இப்படி எத்தனையோ மோதல்களைச் சந்தித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் முன்பைவிட வலிமையாக அந்தக் கட்சி மீண்டு வந்திருக்கிறது.

ஆள்வதற்கு ஆளுங்கட்சிக்குப் பொறுப்பைக் கொடுக்கும் மக்கள்தான், அவர்களைக் கண்காணிக்கும் அதைவிட உயர்ந்த பொறுப்பை எதிர்க்கட்சிக்குக் கொடுக்கிறார்கள். அதிலும் சாமான்யமான எதிர்க்கட்சியாக இல்லாமல் வலிமையான எதிர்க்கட்சி என்ற பொறுப்பை அ.தி.மு.க-வுக்குக் கொடுத்திருக்கிறார்கள். மக்களும் ஜனநாயகமும் அ.தி.மு.க-வுக்கு அளித்திருக்கும் பொறுப்பை உணர்ந்து அந்தக் கட்சியின் தலைவர்கள் செயல்பட வேண்டும்.