Published:Updated:

கருத்துச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

வீடுகளில் பாதுகாப்புக்காக வளர்க்கப்படும் நாய்கள், திருடர்களைத் துரத்துவதை விட்டுவிட்டு அப்பாவிகளை விரட்டிக் கடிக்கும். சமூகவலைதளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களை முறைப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் இதுபோன்ற ஆபத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளன. டிஜிட்டல் தளத்தில் செய்திகளை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்களையும் இவை அரசின் கண்காணிப்பில் கொண்டுவருகின்றன. ‘இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானது’ எனச் செய்தி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

‘சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களுக்கு இணையாகச் செய்தி நிறுவனங்களைக் கருதுவது தவறானது’ என, கேரள உயர் நீதிமன்றத்தில் தேசிய ஒளிபரப்பாளர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில், ‘தொலைக்காட்சிச் செய்தி நிறுவனங்கள்மீது புதிய விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர் சங்கமும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளது. பி.டி.ஐ செய்தி நிறுவனம் இதேபோன்ற ஒரு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.

எல்லோரும் கருத்து தெரிவிக்கும் இடைநிலை ஊடகமாக சமூகவலைதளங்கள் உள்ளன. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறாத திரைப்படங்களையும் வெப்சீரிஸ்களையும் ஓ.டி.டி தளங்கள் வெளியிட முடியும். செய்தி ஊடகங்கள் அப்படிப்பட்டவை அல்ல. பிரஸ் கவுன்சில், தேசிய ஒளிபரப்பு தர ஆணையம், கேபிள் டெலிவிஷன் ஒழுங்குமுறைச் சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் சட்டங்களின்படி செய்திகள் முறைப்படுத்தப்படுகின்றன. எனவே இன்னொரு சட்டம் தேவையற்றது. குழப்பமான விதிகளுடன் கூடிய இந்தச் சட்டம், ‘ஊடகங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறதோ’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

தலையங்கம்
தலையங்கம்

ஐ.டி சட்டத்தில் 66ஏ என்று ஒரு பிரிவு இருந்தது. சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்களை இந்தப் பிரிவின்கீழ் கைது செய்தது காவல்துறை. ‘இந்தச் சட்டம் கருத்துச்சுதந்திரத்துக்கு எதிரானது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி இந்தச் சட்டத்தையே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்தது நீதிமன்றம். அதன்பின்னும் இந்தச் சட்டத்தின் கீழ் ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இல்லாத சட்டத்தின்படி இத்தனை வழக்குகள் போட்ட காவல்துறையை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கண்டித்தது. இந்த அளவே சட்ட விழிப்புணர்வு கொண்ட ஒரு தேசத்தில், குழப்பமான சட்டங்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்தால் கவலை ஏற்படுகிறது.

சமூகவலைதளங்களில் அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதற்காகவே ஐ.டி சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விமர்சித்தவர்களையெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிராக முத்திரையிட்ட போக்கு இதையே உறுதிப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் தமிழகத்திலும் சமூகவலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவதூறாக எழுதுபவர்கள்மீது சட்ட நடவடிக்கை அவசியம்தான். ஆனால், குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களைப் பிரயோகிப்பது தவறு.

கருத்துச்சுதந்திரத்தில் அரசோ, தனிநபர்களோ, சிறுகுழுக்களோ தலையிட அனுமதிக்கக்கூடாது. இந்திய ஜனநாயகத்தைப் பேணிக் காக்க இவை அவசியமான அடிப்படைகள்.