Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

இயற்கையில் ஆண் பெண் பாலின விகிதம் சமமாக இருப்பது மிகவும் அவசியம்.

ந்தியாவில் 4.58 கோடி பெண்கள் `காணாமல் போய்விட்டதாக’த் தெரிவிக்கிறது ஐ.நா சபை அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை.

காணாமல் போதல் என்பது கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து பெண் எனில் கருவைக் கலைப்பதில் தொடங்குகிறது... ஐந்து வயதுக்குட்பட்ட பெண் சிசுக்களை குடும்பத்தினரே சிதைப்பதிலும் தொடர்கிறது... ஆணவக் கொலை உட்பட பல்வேறு கொடுமையான வழிகளில் உயிர் பறித்தல் வரை செல்கிறது.

இயற்கையில் ஆண் பெண் பாலின விகிதம் சமமாக இருப்பது மிகவும் அவசியம். இது பெரும்பாலும் 100 பெண்களுக்கு 102 முதல் 106 ஆண்கள் என்றே உலகின் பல நாடுகளில் உள்ளது. இதுவே இயற்கையான விகிதமும்கூட. இந்தியாவிலோ, இந்த விகிதம் அச்சம்கொள்ள வைக்கிறது. 2011-2013 ஆண்டுகளில் இங்கு 100 பெண்களுக்கு 110 ஆண்கள் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண் குழந்தைகள் மேலான மக்களின் ஆசையைக் காட்டுவதாகவே ஐ.நா தெரிவிக்கிறது. உலகில் காணாமல் போன பெண் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது என்கிற கவலையையும் ஐ.நா பதிவு செய்திருக்கிறது.

என்னதான் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்வதற்கு எதிரான சட்டங்கள் அமலில் இருந்தாலும், இந்த நிலை இன்னும் தொடர்வது எப்படி? சட்டத்தை அமல்படுத்துவதில் இருக்கும் சிக்கலை, மக்களின் பெண் விரோத மனப்பாங்கையே இது எடுத்துக்காட்டுகிறது. தொட்டில் குழந்தை திட்டம், கருவில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் பெண் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம். குலதெய்வம், செல்வமகள் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, மறுபுறம் இந்தக் கொலைகளில் ஈடுபடுவது என்ன நியாயம்? ஆணோ பெண்ணோ - குழந்தை என்பது ஓர் உயிர் என்பதை அடிப்படையாகக்கொண்ட உலகின் தொன்மையான தாய்வழிச் சமூகத்திலிருந்து நாம் விலகிவிட்டோமா, என்ன?

எந்தக் குழந்தையும் நம் குழந்தைதான்; குழந்தையைப் பேணிப் பாதுகாப்பதை நம் எதிர்காலத்துக்கான முதலீடாகக் கருதக்கூடாது. ‘ஆம்பளைப் புள்ள, நம்மளைக் கடைசி காலத்துல காப்பாத்துவான்’ என்று சொல்லி, முதிய வயதில் நடுத்தெருவில் நிற்கும் பெற்றோரை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ‘பொம்பளைப்புள்ள நமக்கு சப்பாடா போட போகுது’ என்கிற கேள்விக்குப் பதிலாக பெற்றோரை அரவணைத்து அவர்களின் அந்தியை வெளிச்சமாக்கும் மகள்களையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நாம் நம் பிள்ளைகளுக்குப் பொறுப்புடன் கடத்த வேண்டிய உண்மை ஒன்று உண்டு. ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ... அந்தப் பாலினத் தேர்வு அதன் வசம் இல்லை. குழந்தையைச் செம்மைப்படுத்தும் பணி மட்டுமே நம்முடையது. வளர்த்த கடமைக்குக் கூலியாக, பாதுகாப்பான முதுமையைக் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது தவறு என்கிற புரிதலை தலைமுறைகளுக்குக் கடத்துவோம்.

நமக்குள்ளே...