Published:Updated:

எது தற்சார்பு?

பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை வணக்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘தற்சார்பு’ என்பதுதான் கிராமப் பொருளாதாரத்தின் அடிநாதம். ஆனால், அடிக்கடி ‘தற்சார்பு’ என்று பேசிப்பேசிப் பரபரப்புக் கிளப்பும் மோடி அரசோ... ஓர் அவசரச் சட்டத்தின் மூலமாக கிராமங்களின் தற்சார்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு சென்றிருப்பதன் மூலமாக, அவற்றின் எதிர்காலம் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் கிராம மக்களும் விவசாயிகளும்!

மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி என்ற படிநிலைகளில் இந்த வங்கிகள் இயங்கி வருகின்றன.

விவசாயிகள், சிறு குறு தொழில் செய்பவர்கள் எனப் பெரும்பாலானவர்கள், இந்த வங்கிகளில்தான் சேமிக்கிறார்கள். அவசரத்துக்குக் கடன்கொடுத்து எளிய மனிதர்களைக் கைத்தூக்கிவிடுவதும் இந்த வங்கிகளே.

‘பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகள் முறைகேடாகக் கடன் கொடுத்துள்ளது. இதுபோன்ற ஊழல்களைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கை’ என்கிறது மத்திய அரசு. ஆனால், விஜய் மல்லையாக்களுக்கும், நிரவ் மோடிகளுக்கும் பல ஆயிரம் கோடிகளை அள்ளி அள்ளிக் கொடுத்த தேசிய வங்கிகள், இதே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது, ‘கூட்டுறவு வங்கிகளைக் கைப்பற்றுவதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேட பி.ஜே.பி அரசு திட்டமிட்டுள்ளது’ என்கிற குற்றச்சாட்டுகளில் இருக்கும் உண்மைகளை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

இதுநாள் வரை அந்தந்த மாநிலங்களை ஆளும் கட்சிகள்தான் கூட்டுறவு வங்கிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதன் காரணமாக, கூட்டுறவுச் சங்கத்திலும் முறைகேடுகள் நடக்கத்தான் செய்தன. அதையெல்லாம் களைந்தெடுக்க வேண்டும் என்பதுதான் இன்றைய அவசரத் தேவை. அதைவிடுத்து, உள்ளூர் மக்களின் பங்களிப்போடும், வழிகாட்டுதலோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிகளை, எங்கோ டெல்லியிலிருந்து இயக்க நினைப்பது... வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயலன்றி வேறில்லை!

அதிகாரப் பரவலாக்கம்... தற்சார்பை வளர்க்கும். அதிகாரக் குவிப்பு... தற்சார்பை அழிக்கும்!

-ஆசிரியர்