Published:Updated:

கறுப்பு ஞாயிறு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

கறுப்பு ஞாயிறு!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

மக்களின் உணர்வுகள் சம்பந்தமான பிரச்னைகளில் அரசு நிர்வாகமும் காவல்துறையும் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இருக்கும் பள்ளி வளாகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.

சமயோசிதமாகவும் துரிதமாகவும் செயல்பட்டிருந்தால், ஒரு சிறு பொறியாக உருவெடுத்தபோதே மக்களின் கோபத்தைத் தணித்திருக்க முடியும். பள்ளி விடுதியின் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 12-ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணம் குறித்து, பெற்றோரும் உறவினர்களும் ஆதங்கத்தோடு எழுப்பிய அடுக்கடுக்கான சந்தேகங்களுக்கு உடனடி பதில் கிடைக்கவில்லை.

மாணவியின் திடீர் மரணம் ஏற்படுத்திய வலி, சோகம், கோபம் ஆகியவற்றைப் போக்கி பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கக் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் முயன்றிருந்தால், அன்றோடு இந்தப் பிரச்னை முடிந்திருக்கும். மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இரண்டு ஆசிரியர்களை மட்டும் கைதுசெய்து பிரச்னையை முடிக்கப் பார்த்தது காவல்துறை. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றச் சொல்லி பெற்றோர் வைத்த கோரிக்கையைக்கூட மாவட்ட நிர்வாகம் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இந்த அலட்சியமே மாணவியின் உறவினர்களை நான்கு நாள்கள் தொடர்ச்சியாகப் போராடத் தூண்டியிருக்கிறது.

மாணவி மரணம் தொடர்பான சந்தேகங்களுடன் சில வதந்திகளும் இணைந்து சமூக வலைதளங்களில் பரவ, ஜூலை 17-ம் தேதி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்துக்கு வந்தனர். நிலைமை கைமீறிப் போகும்வரை, இது குறித்து உளவுத்துறைக்குத் தகவல் தெரியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை தோற்று நிற்க, அக்கறையான ஒரு போராட்டம் திடீரென வன்முறைக் களமாக உருவெடுத்துப் பள்ளி வளாகமே சூறையாடப்பட்டிருக்கிறது.

எல்லாம் நடந்து முடிந்தபிறகு மாணவி மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை முதலிலேயே செய்யமுடியாதபடி இந்த அரசை எது தடுத்தது என்பதுதான் புரியவில்லை. இன்னொரு பக்கம் வன்முறை தொடர்பாகவும் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். `இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டதுபோல் தெரிகிறது' என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சரியான நேரத்தில், சரியான நடவடிக்கையை அரசு எடுக்கத் தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அசம்பாவிதங்கள் உதாரணம். இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவி மரணம் குறித்து பெற்றோருக்கு இருக்கும் சந்தேகங்களைக் களையும் வகையில் வெளிப்படையான விசாரணையை நடத்தி உரிய நீதியைத் தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகங்கள் அனைத்தும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த விரும்பத்தகாத நிகழ்விலிருந்து அரசு மட்டுமல்ல, தனியார் பள்ளி நிர்வாகங்களும் பெற்றோர்களும்கூடப் படிப்பதற்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன.