Published:Updated:

நீதியைப் புதுப்பியுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நீதியைப் புதுப்பியுங்கள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தேசத் துரோக சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்துவது குறித்த வழக்கு ஒன்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளார் அவர்.

‘சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனபிறகும் அவசியமா? சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி, கோகலே போன்ற தலைவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அறிமுகம் செய்யப்பட்டது இந்த தேசத் துரோக சட்டப்பிரிவு. கருத்து சுதந்திரத்தை முடக்கும் இந்த காலனி ஆட்சிக்கால சட்டம் தற்போது தேவையா?’ என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தார் தலைமை நீதிபதி.

‘ஒரு மரத்தைத் துண்டாக்கக் கொடுக்கப்பட்ட ரம்பம், ஒரு காட்டையே அழிப்பது போன்றுதான் இந்த தேசத் துரோக சட்டமும் பயன்படுத்தப்படுகிறது. யாரையாவது பிடிக்காவிட்டால், அவர்கள்மீது இந்த சட்டத்தில் வழக்குப் போட்டுவிடுகிறார்கள். இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏன் நீக்கக் கூடாது?’ என மத்திய அரசைக் கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இதேபோலவே இன்னொரு பிரச்னையும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. சிறார் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையே மூன்று ஆண்டுகள்தான். ஆக்ரா மத்திய சிறையில் 13 பேர் அடைபட்டுக் கிடக்கிறார்கள். சிறாராக இருக்கும்போது கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள். வழக்கு விசாரணை முடியாமல் 14 முதல் 22 ஆண்டுகள் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்கள் அவர்கள். விசாரித்து தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலே அவர்கள் எப்போதோ விடுதலை ஆகியிருக்க முடியும்.

இந்த விஷயம் அறிந்து அதிர்ந்த உச்ச நீதிமன்றம், உடனடியாக அந்த 13 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பல நாட்கள் ஆனபிறகும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு இன்னமும் தபாலில் வந்து சேரவில்லை’ என்று சிறை அதிகாரிகள் காரணம் சொன்னார்கள். இந்தத் தாமதம் குறித்த விவகாரத்தை தானாகவே முன்வந்து வழக்காக ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு. “நாம் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். இருந்தபோதிலும் தகவல்களை அனுப்ப, வானில் பறக்கும் புறாக்களுக்குக் காத்திருக்கிறோம்’’ என்று வேதனை தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த நிலையை மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

தலையங்கம்
தலையங்கம்

இதன்படி இனி உச்ச நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றப்படும். சிறைகளுக்கும் கீழமை நீதிமன்றங்களுக்கும் எலெக்ட்ரானிக் முறையில் அவை உடனுக்குடன் சென்றடையும். இதற்காக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆகியோர் உதவியுடன் ஒரு வழிமுறையை உருவாக்குமாறு உச்ச நீதிமன்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் தலைமை நீதிபதி.

நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் சில நடைமுறைகளை, சட்டங்களை சூழலுக்கு ஏற்றபடி மாற்றுவதன் மூலம் ‘எளிய மனிதர்களுக்கும் நீதி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்திவருகிறது. தாமதிக்கப்படும் நீதி மட்டுமல்ல, புதுப்பிக்கப்படாத நீதியும் மறுக்கப்பட்ட நீதிதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism