Published:Updated:

அரசியல் செய்யாமல் விலையைக் குறையுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

அரசியல் செய்யாமல் விலையைக் குறையுங்கள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மீண்டும் ஒருமுறை மத்திய அரசு இப்போது குறைத்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்த மத்திய அரசு, இம்முறை பெட்ரோலுக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் வரி குறைத்திருக்கிறது.

இந்த வரிக்குறைப்பை அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘பிரதமர் மோடி ஏற்கெனவே வலியுறுத்தியதைப் போல மாநில அரசுகளும் தங்கள் வரியைக் குறைக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதைத் தொடர்ந்து அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்கள் உடனடியாக வாட் வரியைச் சிறிதளவு குறைத்துள்ளன. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரிக்குறைப்பு தொடர்பாக எந்த உத்தரவாதமும் தரவில்லை.

பெட்ரோலியப் பொருள்கள்மீது அடிப்படைக் கலால் வரி, சிறப்புக் கூடுதல் கலால் வரி, ரோடு செஸ், விவசாய செஸ் என நான்குவிதமான வரிகளை மத்திய அரசு விதிக்கிறது. இதில் அடிப்படைக் கலால் வரியை மட்டும் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்கிறது. இரண்டு முறையும் மத்திய அரசு குறைத்தது ரோடு செஸ் என்பதால் மாநிலங்களுக்கு வரி வருமான பாதிப்பு ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் சொல்கிறார். ஆனால், ‘மத்திய அரசின் வரிகளைச் சேர்த்த விலையின் மீதே மாநில அரசு வாட் வரி விதிப்பதால், மாநிலத்துக்கு வருமான இழப்பு ஏற்படும்' என்பது தமிழக நிதியமைச்சரின் வாதம்.

‘கடந்த 2014-ம் ஆண்டில் மத்திய அரசின் வரிகள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 9.48 எனவும், டீசலுக்கு ரூ. 3.57 எனவும் இருந்தன. இரண்டு முறை வரிகளைக் குறைத்தபின்பு இப்போதும் பெட்ரோலுக்கு ரூ. 19.90 ஆகவும், டீசலுக்கு ரூ. 15.80 ஆகவும் இருக்கின்றன. இதை 2014 நிலைக்குக் குறைக்க வேண்டும்' என்று தமிழக நிதியமைச்சரும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதியமைச்சர்களும் கேட்கிறார்கள்.

‘மத்திய அரசு மட்டுமே வரியைக் குறைக்க வேண்டும், நாங்கள் குறைக்க மாட்டோம்' என்பது விதண்டாவாதம் தவிர வேறு எதுவுமில்லை. எப்போதும் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. உணவுப்பொருள்களின் விலைகூட உச்சத்துக்குச் சென்று சாமானியக் குடும்பங்களை நிம்மதி இழக்க வைத்திருக்கிறது. பெட்ரோலியப் பொருள்களின் வரிகளைக் குறைப்பது, வட்டி விகிதத்தைத் திருத்துவது, கோதுமை ஏற்றுமதிக்குத் தடை என மத்திய அரசு பணவீக்கத்தைக் குறைக்க முயற்சிகள் எடுத்துவருகிறது. மாநில அரசுகளும் வரியைக் குறைப்பதே எளிய குடும்பங்களின் பட்ஜெட்டைக் கட்டுக்குள் வைக்கும், சிறுதொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

‘பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்போம்' எனத் தேர்தல் வாக்குறுதி அளித்தது தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்தபின்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வரியை மட்டும் 3 ரூபாய் குறைத்தது. டீசல் வரியைக் குறைக்கவில்லை. எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.100 மானியம் அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இப்போதே இவற்றைச் செய்யுங்கள்; வீண் அரசியல் செய்யாதீர்கள்.