Published:Updated:

வரவேற்க வேண்டிய அறிவிப்பு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

‘இனி மாநில அரசுகள் கொரோனாத் தடுப்பூசிக்காகச் செலவழிக்கத் தேவையில்லை. மத்திய அரசே மொத்தமாக வாங்கி எல்லா மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்கும்’ என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது. அரசு எடுக்கும் எந்த ஒரு கொள்கை முடிவிலும், சூழலுக்கும் தேவைக்கும் ஏற்றபடி மாற்றங்கள் செய்ய வேண்டும். அப்படி நிகழ்ந்த மாற்றம் இது.

தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ‘18 முதல் 44 வயது வரை உள்ளோருக்கு மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகத் தடுப்பூசி வாங்கிச் செலுத்தலாம்’ என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இது தட்டுப்பாட்டைத் தீர்க்க உதவவில்லை. கோவிஷீல்டு, கோவேக்ஸின் என இரண்டு இந்தியத் தடுப்பூசிகளை மட்டும் நம்பியிருக்க முடியாது என்பதால், பல மாநில அரசுகள் சர்வதேச டெண்டர்கள் கோரின. என்றாலும், வெளிநாட்டுத் தடுப்பூசி நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்க முன்வரவில்லை. இந்நிலையில் மாநில முதல்வர்கள் பலரும், ‘தடுப்பூசி விநியோகத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்’ என்று கடிதம் எழுதினர். இந்தச் சூழலில், நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார். எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும். மீதி 25 சதவிகிதத் தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகள் வாங்கிக்கொள்ளலாம். சின்னச் சின்ன மருத்துவமனைகள் நேரடியாகத் தடுப்பூசிகள் வாங்குவது சிரமம் என்பதால் தடுப்பூசி போடுவதையே நிறுத்திவிட்டன. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா முழுக்க 5,000 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாத் தடுப்பூசி கிடைத்தது. இப்போது சுமார் 1,700 மருத்துவமனைகள் மட்டுமே தடுப்பூசி போடுகின்றன. தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி பெறுவதை சுலபமாக்கினால், பல இடங்களில் தடுப்பூசி கிடைக்கும். இது, அரசு மருத்துவமனைகள்மீதான அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகை மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றபடி பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளைத் தொடர்ந்து இப்போது ஸ்புட்னிக் தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வருகிறது. மற்ற வெளிநாட்டுத் தடுப்பூசி நிறுவனங்களுக்கும் விதிகளைத் தளர்த்தி அனுமதி தந்துள்ளது மத்திய அரசு. இன்னொரு பக்கம் இந்தியாவில் இன்னும் சில மருந்து நிறுவனங்களில் தடுப்பூசித் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ‘பயாலஜிக்கல் ஈ’ என்ற நிறுவனத்தின் கொரோனாத் தடுப்பூசி இறுதிக்கட்டப் பரிசோதனையில் இருக்கிறது. இப்போதே மத்திய அரசு இந்த நிறுவனத்திடம் 30 கோடித் தடுப்பூசிகள் வாங்க ரூ. 1,500 கோடி முன்பணம் கொடுக்கவுள்ளது வரவேற்கத்தக்கது. முன்பு கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இப்படி முன்பதிவு செய்யத் தவறியதால்தான் நமக்குத் தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்பட்டது. மத்திய அரசு தன் தவற்றை உணர்ந்து, கொள்கை முடிவுகளை மாற்றிக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கொரோனா இரண்டாவது அலையின் உச்சத்தைக் கடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், மூன்றாவது அலை பற்றிய கவலை தரும் கணிப்புகள் வருகின்றன. வாழ்வா, வாழ்வாதாரமா என்ற பிரச்னையிலிருந்து முழுமையாக மீள, தடுப்பூசி ஒன்றே வழிவகுக்கும்.