Published:Updated:

மருத்துவர்களுக்குத் தோள் கொடுப்போம்!

நவீன மருத்துவம் முட்டாள்தனமானது. அடுத்தடுத்து அது அறிமுகப்படுத்தும் மருந்துகள் அத்தனையுமே தோல்வியடைந்துவருகின்றன. நவீன மருத்துவம் லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டது

பிரீமியம் ஸ்டோரி

மனிதகுலத்தை அச்சுறுத்திய பல நோய்களை நவீன மருத்துவத்தின் துணையுடன்தான் வேரறுத்தோம். மானுட வரலாற்றின் மிக மோசமான நோய் ஒன்றை எதிர்த்து உலகமே போராடிவரும் இன்றைய சூழலில், நவீன மருத்துவத்தை மோசடி என வர்ணிப்பது பலரின் பொழுதுபோக்காக இருக்கிறது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களே இப்படிப் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

இரண்டு முறை கொரோனா அறிகுறிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், பா.ஜ.க-வின் எம்.பி பிராக்யா சிங் தாகூர். ‘‘நான் கோமியம் குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனாத் தொற்று ஏற்படாது’’ என்று பேசியிருக்கிறார் அவர்.

`கொரோனாவை குணப்படுத்தும் அற்புத மருந்து’ என்று ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்தை வாங்குவதற்கு 40,000 பேர் முண்டியடித்துக்கொண்டு நின்றனர். எந்தவித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தப்படாத அந்த மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி கொடுத்தது வேதனையான விஷயம்.

நாடே ஆக்சிஜன் தட்டுப்பாட்டில் தவிக்கும் நேரத்தில் கர்நாடக பா.ஜ.க பிரமுகரான விஜய் சங்கேஷ்வர் என்பவர், ‘‘மூக்கில் எலுமிச்சைச் சாற்றை விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு கூடுகிறது. என் உறவினர்கள், நண்பர்கள் 200 பேருக்கு இந்த சிகிச்சையைக் கொடுத்தேன்’’ என்றார். கொரோனா தொற்றிய ஓர் ஆசிரியர் இந்த சிகிச்சையைப் பின்பற்றி இறந்துவிட்டார். யோகா சாமியார் பாபா ராம்தேவ், ‘‘கடுகு எண்ணெயை மூக்கில் விட்டால், கொரோனா வைரஸ் நம் வயிற்றுக்கு வந்து செத்துப் போய்விடும்’’ என்றார். இதைத் தொடர்ந்து வட மாநிலங்களில் கடுகு எண்ணெய் விலை ஏறியிருக்கிறது.

அதே பாபா ராம்தேவ், ‘‘நவீன மருத்துவம் முட்டாள்தனமானது. அடுத்தடுத்து அது அறிமுகப்படுத்தும் மருந்துகள் அத்தனையுமே தோல்வியடைந்துவருகின்றன. நவீன மருத்துவம் லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டது’’ என்று சர்வ சாதாரணமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். யாரோ ஊர் பேர் தெரியாத ஒருவர் இப்படிப் பேசுகிறார் என்றால்கூட, இதைக் காதில் வாங்காமல் கடந்துபோய்விடலாம். ஆனால் இவரோ பிரதமர், மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் என்று அதிகார மையத்தில் இருக்கும் அத்தனை பேருடனும் அடிக்கடி மேடை ஏறுகிறவர்.

தலையங்கம்
தலையங்கம்

நல்லவேளையாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இவரைக் கண்டித்திருக்கிறார். இந்திய மருத்துவர் சங்கமும் பாபா ராம்தேவ்மீது வழக்கு போட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, `தனக்கு வந்த வாட்ஸப் செய்தி ஒன்றைத்தான் பாபா ராம்தேவ் படித்தார். அவருக்கு மருத்துவர்கள்மீது மிகுந்த மரியாதை இருக்கிறது’ என்று அவர் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புறங்களை இப்போது கொரோனா அதிகம் தாக்கியுள்ளது. சிகிச்சையைத் தேடி வருவதைத் தவிர்த்துவிட்டு, மக்கள் இதுபோன்ற முரட்டு வைத்தியங்களை நாடினால் பேராபத்து நேரிடும். கிட்டத்தட்ட ஒன்றே கால் ஆண்டாக கொரோனாவுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்புணர்வுடன் கடமையைச் செய்யும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் தோள் கொடுப்போம். இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சுகளை அரசுகள் கண்டிக்க வேண்டும். உண்மையில், கொரோனாவைவிட மிக மோசமான தொற்றுநோய் இவர்கள்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு