Published:Updated:

சட்டத்துறையிலேயே சட்ட மீறலா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

சட்டத்துறையிலேயே சட்ட மீறலா?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிவிப்பு ஒன்று, நாடு முழுக்க வழக்கறிஞர்கள் மத்தியில் கடுங்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள், இந்தியா முழுக்க இருக்கும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள். இதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒப்புதல் அளித்துவிட்டார். உயர்நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்களைவிட உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களே நீதிபதி பதவிக்கு மிகவும் தகுதியானவர்கள்’ என்கிறது அந்த அறிவிப்பு.

வெறுமனே அறிவிப்புடன் நிற்காமல், நீதிபதி பதவிக்குத் தகுதியான வழக்கறிஞர்களைக் கண்டறிவதற்குக் குழு ஒன்றையும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அமைத்துள்ளது. நீதிபதி ஆவதற்குத் தகுதியுள்ளவர்களை இந்தக் குழு கண்டறிந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்யுமாம். அவர், சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களுக்கு அந்தப் பட்டியலை அனுப்புவாராம்.

‘இந்த அறிவிப்பே அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்று கண்டித்துள்ளது சென்னை வழக்கறிஞர்கள் சங்கம். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து அரசியல் சட்டத்தின் பிரிவு 217(2) தெளிவாக வரையறுத்துள்ளது. ‘10 ஆண்டுகள் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது, உயர்நீதிமன்றங்களில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்திருக்க வேண்டும்’ என்கிறது அந்தச் சட்டப்பிரிவு. ‘`இதில் உச்சநீதிமன்றம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை இங்கு கொண்டுவருவது அரசியல் சட்டமீறல்’’ என்கிறது சென்னை வழக்கறிஞர்கள் சங்கம்.

‘`இந்த அறிவிப்பு உயர் நீதிமன்றத்தின் நிர்வாக நடைமுறைகளில் குறுக்கீடு செய்வது போன்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகளாக யாரை நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்துக்கொள்வது சரியல்ல’’ என இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் பிரபாகரனும் கண்டித்துள்ளார். ‘`உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை உச்ச நீதிமன்றம் தன் கையில் எடுத்துக்கொண்டால், உயர் நீதிமன்றங்களில் பணிபுரியும் திறமையான வழக்கறிஞர்கள் பலரும் நீதிபதியாகும் வாய்ப்பை இழப்பார்கள்’’ என்று கருத்து தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்.

தலையங்கம்
தலையங்கம்

ஆந்திரா, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி எனப் பல உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர் சங்கங்களும் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூரு வழக்கறிஞர் சங்கம் இன்னும் ஒருபடி மேலே போய், ‘கர்நாடக வழக்கறிஞர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமியுங்கள்’ எனத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.

நீதிபதிகள் நியமனம் சர்ச்சைக்கு ஆளாகக்கூடாது. உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகளும் இணைந்தே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிக்கிறார்கள். அந்த மரபை யாரோ கையில் எடுத்துக்கொள்ள முடியாது. அரசியல் சட்ட விதிகளை மதித்து, நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மை மற்றும் மாண்புகளைப் போற்ற வேண்டும். நீதிபதிகள் நியமனத்தை இதுபோல சங்கங்கள் அவுட்சோர்ஸிங் செய்ய நினைப்பது மிகவும் ஆபத்தானது.