லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

கோவிட் 19-ன் உளவியல் தாக்கங்கள் பெரியவர்களைவிடவும் இளம் வயதினரை அதிகம் பாதிக்கின்றன.

`நாடடங்கின் விளைவாகக் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் இன்னும் வெகு காலத்துக்கு உளவியல் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.’

ஆம்... அண்மையில் இங்கிலாந்திலுள்ள பாத் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகளில்தாம் இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

4 முதல் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் குறித்த 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளிலிருந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. `நாடடங்கின் தனிமையும் அதனால் விளையும் மன அழுத்தம் மற்றும் ஏக்கமும் இளம் வயதினர் மனத்தைவிட்டு அகல வெகுகாலம் பிடிக்கும்’ என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடடங்கு விலக்கப்பட்டாலும், நெடுங்காலத்துக்கு ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ எனும் சமூக விலகல் தொடரப்பட வேண்டியிருக்கும். இவையெல்லாம் சேர்ந்து குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகளுக்கு கடும் உளவியல் சிக்கல்களை உண்டாக்கும்.

கோவிட் 19-ன் உளவியல் தாக்கங்கள் பெரியவர்களைவிடவும் இளம் வயதினரை அதிகம் பாதிக்கின்றன. மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆதிகாலம் தொடங்கி கூட்டம் கூட்டமாகவே வாழ்ந்து பழகியவனால் தனியே வாழ்வது என்பதை கற்பனையிலும் சாத்தியப்படுத்த முடியாது. தொடர் நாடடங்கில் நாம் நம்மை சமூக ஊடகங்கள், தொலைபேசி உரையாடல்கள், அக்கம்பக்கத்தினருடனான அளவளாவல் என்று உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கிறது? பல வீடுகளில் பகல் நேரங்களில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் அமர்ந்து கவனிக்கிறார்கள்; வகுப்புகள் இல்லாதபோது லேப்டாப், பிஎஸ்4, மொபைல் கேம் என்று தங்கள் ஓடுகளுக்குள் சுருங்கிக்கொள்கிறார்கள். கிராமப்புறங்களில் பெருவெளியில் ஓடியாடித் திரிந்த குழந்தைகளையும், இளம் வயதினரையும் கொரோனா ஒருபுறமும், ட்ரோன் கேமராக்கள் மறுபுறமும் துரத்தியதில் அவர்களும் வீடுகளுக்குள் முடங்கிவிட்டார்கள்.

இப்படி ஒடுங்கியவர்கள் வீடுகளுக்குள்ளேயே தனித்தீவுகளாக வாழ்வது சகஜம்தான். அதிலும் இரவு முழுக்க விளையாடி, அதிகாலையில் உறங்கச் செல்லும் பல குழந்தைகளைப் பார்க்க முடிகிறது. சரியான நேரத்தில் உறங்குவதும் இல்லை, விளையாடுவதும் இல்லை. இதைச் சரிசெய்ய பெற்றோரான நாம் முயற்சியெடுக்க வேண்டும். குழந்தைகளுடன் நாம் செலவு செய்யும் நேரம் மிக முக்கியம்.

தோழி ஒருவரின் வீட்டில் தாயும் குழந்தைகளுமாகச் சேர்ந்து சமைப்பது, பேசிக்கொண்டே துணி உலரப்போடுவது, மடித்துவைப்பது போன்ற எளிய வேலைகளைச் செய்கிறார்கள். இன்னும் ஒருவர் மகளுடன் இணைந்து ஆன்லைன் நடன வகுப்பில் சேர்ந்திருக்கிறார். உறவினர் பெண் ஒருவர் மகனுடன் சேர்ந்து யூடியூப்பில் குக்கரி சேனல் தொடங்கியிருக்கிறார். இப்படி ஏதோவொன்றைக் குழந்தைகளுடன் சேர்ந்து செய்வது சிறப்பு.

விளையாடத் துணையின்றி, பேசத் துணையின்றி ஓட்டுக்குள் சுருங்கிக்கொள்ளும் குழந்தைகளை உயிர்ப்புடன் வைக்க உதவிடுவோம். இப்போதைய சூழலில் நாம் குழந்தைகளுக்குத் தேடித்தரும் பெரும் செல்வம் நம் அன்பும் நேரமும் மட்டுமே. நமக்குள் இருக்கும் குழந்தைமையை மீட்டெடுக்கக் கிடைத்த வாய்ப்பாகவும் இதைக் கருதலாம். யாருக்குத்தான் குழந்தையாகி மீண்டும் குதூகலித்து வாழ ஆசையில்லை... நாமும் மீண்டு, நம் குழந்தைகளையும் இந்தக் கொடிய காலத்திலிருந்து மீட்போம். ஏனெனில், பெண் என்பவள் எப்போதும் மீட்பவளே!

நமக்குள்ளே...