Published:Updated:

‘சூறையாடுங்கள்!’

பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை விகடன்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘விவசாயிகள் நலனுக்காக மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இனி ‘ஒரே நாடு, ஒரே சந்தை’ செயல்படும்.’’ - அண்மையில் இப்படி ஓர் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் போகிறேன்’ என்று சொல்வதுபோல வாய்ஜாலம் காட்டுவதாகவே உள்ளது.

அதாவது, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திலிருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு நீக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பொருள்களை விவசாயிகள் தங்களின் விருப்பப்படி ஏற்றுமதி செய்யலாம்; இருப்பு வைக்கலாம்.

அடுத்து, விவசாய விளைபொருள்கள் வர்த்தகம் மற்றும் வணிகச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்துக்கு வெளியிலும் தடையின்றி வர்த்தகம் செய்யலாம். உணவுப் பொருள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

மூன்றாவதாக விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், பண்ணைச் சேவைகள் ஒப்பந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று முக்கிய முடிவுகளும் விவசாயிகளின் நலனுக்காகவே எடுக்கப்படுகின்றன என்று சொல்வதை நிச்சயம் உண்மையான விவசாயிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கெனவே, உள்ளூர் சந்தையிலேயே பேரம் பேசி விற்பனை செய்ய முடியாத குரலற்ற விவசாயிகள், நாடு முழுக்கப் பொருள்களைக் கொண்டு சென்று எப்படி விற்பனை செய்ய முடியும்?

ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், விளைபொருள்களைப் பதுக்கி வைத்துச் செயற்கையாகப் பற்றாக்குறையை உருவாக்கி, பணம் பண்ண நினைக்கும் வியாபாரிகளுக்கும் மட்டுமே, இந்த மூன்று முக்கிய அறிவிப்புகளும் பயன்படும்.

இதுவரை பதுங்கிப் பதுங்கி விவசாயிகளிடம் கொள்ளையடித்த வியாபாரிகளுக்கு, ‘இனி நாடு முழுக்கச் சுதந்திரமாகச் சூறையாடுங்கள்’ என்று அனைத்துக் கதவுகளையும் திறந்துவிட்டுள்ளது மத்திய அரசு.

- ஆசிரியர்