லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

தலையங்கம்

கொரோனா இரண்டாம் அலையின் உச்சத்துக்கு வந்துவிட்டோம். நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கையோ, மெடிக்கல் ஆக்ஸிஜன் சப்ளையோ, மருந்துகளோ சாமான்ய மனிதரான நம்மால் ஏற்பாடு செய்து தர இயலாது. ஆனால், இந்தச் சூழலில் உலகத்துக்கு மிக அவசியமான ஒன்றை நம்மால் கொடுக்க முடியும்... பாசிட்டிவிட்டி. கோவிட்-19 வைரஸ் அச்சத்தால் பள்ளம்பட்டுக்கிடக்கும் சக மனிதர்களின் மனங்களை, ‘ஒண்ணும் ஆகாது...’ என்ற எளிய சொற்களால் நம்மால் நிரப்ப முடியும் என்றால், அதைச் செய்யலாம்தானே தோழிகளே?

பொதுவாகவே, இங்கு சிலரிடம் ஒரு வழக்கம் உண்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரை பார்க்கச் செல்லும்போது, ‘இதே மாதிரிதான் என் தம்பியோட ஃபிரெண்டுக்கும் வந்துச்சு. ரெண்டு வாரம் ஐசியு-ல வெச்சும் காப்பாத்த முடியல’ என்பார்கள், சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கு அந்த வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி யோசிக்காமல். ஆனால் நிலைமை உணர்ந்த சிலர், ‘என்னோட வேலைபார்க்கிற பொண்ணோட தாத்தாகூட இதே பிரச்னையிலதான் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆனார். அவர் வயசுக்கே ஜம்முனு எழுந்து வந்துட்டார்...’ என்று நம்பிக்கை பாய்ச்சுவார்கள், இல்லாத அந்த தாத்தா கேரக்டரை உருவாக்கி.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

கொரோனாவைப் பொறுத்தவரை, நோயை அலட்சியம் செய்வதற்கும், நம்பிக்கை அளிப்பதற்குமான வேறுபாட்டை முதலில் புரிந்துகொள்வோம். காய்ச்சல் மற்றும் பிற கொரோனா அறிகுறிகள் தோன்றிய முதல் நாளே சம்பந்தப்பட்டவரை, ‘ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் கொடுத்துட்டு டாக்டர்கிட்ட போயிடு’ எனலாம். இரண்டு நாள்களுக்கும் மேலாக அறிகுறிகள் தொடர்ந்தால், ‘மைல்டு நிலை கொரோனா மாடரேட் நிலையை அடையுறதைத் தடுக்குறதுக்கான கோல்டன் டேஸ் இது, உடனடியா டாக்டர்கிட்ட ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும்’ எனலாம். சிவியர் நிலை கொரோனா அடைந்தவர்களை, ‘தீவிர சிகிச்சை எடுத்துக்கிறதுக்கான மருத்துவ தொழில்நுட்பம் இருக்கிற ஆஸ்பிட்டல்ல அட்மிஷன் போடணும்’ என்று அறிவுறுத்தலாம்.

ஆனால், இதில் எந்த நிலையிலும், ‘நீ நோயின் பிடிக்குள் போயிட்ட...’ என்று அச்சுறுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாமல், ‘எத்துணை விரைவாக சிகிச்சையை ஆரம்பிக்கிறோமோ, அத்துணை விரைவாகக் குணம்பெறுதல் கிடைக்கும்’ என்பதை அறிவுறுத்தும் நேர்மறை வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.

சேனல்கள் பதைபதைக்கும் பேக்கிரவுண்ட் மியூசிக்குடன் வழங்கும் கொரோனா அவலங்களை நாள்தோறும் பார்த்துக் கிடக்காமல், ஒரு நாளில் ஒருமுறை நாட்டு நடப்புகளை அறிவதற்கு மட்டுமே செய்திகளைப் பார்க்கலாம். ஆதாரமில்லாத கொரோனா ஃபார்வேர்டுகளைப் பார்த்து அரண்டு போகாமல், அதே வேகத்தில் கான்டாக்ட்டில் இருக்கும் அனைவரும் அதை ஃபார்வேர்டு செய்து கடமை ஆற்றாமல், முக்கியமாக அதை நோய் பாதித்தவருக்கோ, அவர் குடும்பத்துக்கோ அனுப்பாமல், நம்பிக்கையான செய்தி தளங்களில் ஆதாரபூர்வமான விழிப்புணர்வு வீடியோக்களை மட்டுமே பார்க்கலாம்.

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது அச்சத்தால் அல்ல, நம்பிக்கையால் தோழிகளே. இந்நேரம் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்ள வேண்டியது நேர்மறை எண்ணங்களை என்ற பொறுப்பை நம் வார்த்தைகளில் தேக்கிக்கொள்வோம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்