Published:Updated:

உக்ரைனில் உக்கிரம் தணியட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

உக்ரைனில் உக்கிரம் தணியட்டும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

உக்ரைன் நாட்டை மையமாக வைத்து ரஷ்யா ஒரு பக்கமும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்னொரு பக்கமும் நடத்தும் யுத்த விளையாட்டு கவலை தருகிறது. கொரோனாத் தொற்றும் அதன் காரணமாகப் போடப்பட்ட ஊரடங்கும் உலகப் பொருளாதாரத்தையே முடக்கியிருக்கும் சூழலில், பல நாடுகளைப் போர்முனையில் கொண்டு போய் நிறுத்தும் பொறுப்பற்ற செயலைச் செய்கிறார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். தங்கள் அண்டை தேசமான உக்ரைனைச் சுற்றி மூன்று பக்கமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளைக் குவித்து வைத்துவிட்டு, ‘‘எங்களுக்குத் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை’’ என்கிறார். ஆனால், எல்லையில் ஆங்காங்கே மோதல்கள் தொடங்கிவிட்டதாக வரும் செய்திகள் கவலை தருகின்றன.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த உக்ரைனை ஒரு தனி நாடாக ரஷ்யா மதிப்பதில்லை என்பதுதான் முதல் பிரச்னை. 2014-ம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்து, அதன் தென்பகுதியான கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார் புதின். உலக நாடுகளின் கண்டனத்தைத் துளியும் பொருட்படுத்தவில்லை. இப்போதும் உக்ரைனின் சில பகுதிகளில் இருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்துத் தூண்டிவிடுகிறது ரஷ்யா.

உக்ரைனில் உக்கிரம் தணியட்டும்!

தன் பாதுகாப்புக்காக நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர முயன்றதுதான் இப்போதைய பிரச்னைக்குக் காரணம். அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து உருவாக்கிய நேட்டோ கூட்டமைப்பில் இப்போது 30 நாடுகள் உள்ளன. ஒரு நாட்டை யாராவது தாக்கினால், மற்றவர்கள் ராணுவ உதவி செய்யவேண்டும் என்பது நேட்டோ நாடுகளின் உடன்படிக்கை. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவை ஏற்கெனவே நேட்டோவில் இணைந்திருக்க, உக்ரைனும் இணைந்துவிட்டால் தன் பக்கத்திலேயே வந்து அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என்பது ரஷ்யாவின் கவலை. அதனால் உக்ரைனை மிரட்டி நேட்டோவைப் பணியவைக்க முயல்கிறார் புதின்.

‘உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை நேட்டோவில் சேர்க்கக்கூடாது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் இருக்கக்கூடாது’ என்றெல்லாம் கடுமையான நிபந்தனைகள் விதிக்கிறார் புதின். உக்ரைன் விவகாரத்தை வைத்து மீண்டும் ரஷ்யாவை ஒரு வல்லரசாக நிறுவ நினைக்கிறார் அவர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் விடுவதாக இல்லை. ஏற்கெனவே சீனாவைச் சமாளிப்பதே அமெரிக்காவுக்குப் பெரும் வேலையாக இருக்கும் நிலையில், இன்னொரு முனையில் ரஷ்யாவும் தலைவலியாக மாறுவதை அவர் விரும்பவில்லை.

ரஷ்யா மீண்டும் வலிமை பெறுவதை ஐரோப்பிய நாடுகளும் அச்சுறுத்தலாக நினைக்கின்றன. அதனால் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, நார்வே, டென்மார்க் என்று பல நாடுகளும் படைகளையும் போர் விமானங்களையும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகளில் குவித்துள்ளன. இப்படி ஒவ்வொரு நாடும் தன் வல்லமையை நிரூபிக்க நினைக்கும் விளையாட்டில் உக்ரைன் சிக்கித் தவிக்கிறது.

எனினும் சில ஒளிக்கீற்றுகளும் தெரிகின்றன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி அதிபர் ஒல்ஃப் ஷோல்ஸ் ஆகியோர் புதினுடன் சமாதானப் பேச்சு நடத்தி வருகிறார்கள். போரின் மோசமான விளைவுகளை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும், அதன் பாதிப்புகளை ஒட்டுமொத்த உலகமும் சந்திக்க நேரிடும் என்பதே இன்றைய நிலை. உக்ரைனில் போர்ப் பதற்றம் தணிந்து அமைதி திரும்பட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism