Published:Updated:

சட்ட நடைமுறையும் சமூக மாற்றங்களும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

சட்ட நடைமுறையும் சமூக மாற்றங்களும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

மீண்டும் பதைபதைக்க வைக்கும் இரண்டு பாலியல் குற்றங்கள் தமிழகத்தை அதிரவைத்திருக்கின்றன.

விருதுநகரில் காதலிப்பதாகச் சொல்லி ஹரிஹரன் என்பவர் ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதுடன் தன் நண்பர்களையும் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியிருக்கிறார். அதேபோல் வேலூரில் தன் ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணை ஐந்துபேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதுடன் பணம், நகைகள், செல்போன் ஆகியவற்றையும் பறித்திருக்கிறார்கள். ஐந்துபேரில் இருவர் சிறுவர்கள்.

பொள்ளாச்சிப் பாலியல் வன்முறை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது பாய்ச்சப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் அளவுக்கு அப்போதைய தமிழக அரசும் காவல்துறையும் மெத்தனமாக நடந்துகொண்டது பொதுமக்களிடம் கண்டனங்களை ஏற்படுத்தியது.

ஆனால் விருதுநகர் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்றாலும், தமிழ்நாட்டு முதல்வர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் டி.ஜி.பி-யின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வேலூர் சம்பவத்திலும் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

டெல்லி நிர்பயா படுகொலையை அடுத்து பாலியல் குற்றங்கள் குறித்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், தங்கள்மீதான பாலியல் அத்துமீறலை மூடிமறைக்கும் காலம் போய், பெண்கள் தங்கள்மீதான அத்துமீறல் குறித்து வெளிப்படையாகப் பேச முன்வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பெண்கள் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு புகார் தெரிவிக்கும் நடைமுறை, சிக்கலிலிருந்து தப்பிக்க ‘காவலன்’ செயலி என்று சட்டப்படி பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

அதேநேரத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் என்பதுடன் சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும் அவசியம். எந்தக் குற்றம் நடந்தாலும் பெண்களின் நடத்தை, உடை ஆகியவற்றின்மீது பழிபோடும் மனோபாவம் முற்றிலும் மாற வேண்டும். பாலின சமத்துவத்தையும் பெண்களை தன்னைப்போல் சக உயிரியாகப் பார்க்கும் மனநிலையையும் ஆண்களுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கவேண்டும்.

வெளியில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் மட்டுமல்லாது குடும்பத்தில் நடைபெறும் பாலியல் மீறல்கள் குறித்தும் சிந்திக்கவேண்டிய தருணமிது. ‘மனைவியின் விருப்பமின்றி கணவன் மேற்கொள்ளும் பாலுறவும் பாலியல் வன்முறையே’ என்று சமீபத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் ‘மனைவியின் விருப்பமின்றி நடைபெறும் பாலுறவைப் பாலியல் வன்முறையாகக் கருத முடியாது’ என்று மும்பை, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றங்கள் இதற்குமுன் தீர்ப்பளித்துள்ளன. ‘இதுகுறித்துத் தெளிவான நிலையெடுத்து மத்திய அரசு சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் குடும்பத்தில் நடைபெறும் பாலியல் வன்முறையைத் தடுக்கும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான எல்லாவகையான பாலியல் வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism