Published:Updated:

நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ரஷ்யாவின் போர்த் தாக்குதலில் உருக்குலைந்துகொண்டிருக்கும் உக்ரைனில் இந்தியாவைச் சேர்ந்த பல ஆயிரம் மாணவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் அடக்கம். போர்ப் பதற்றம் அதிகமுள்ள உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் இவர்களில் பலர் இருக்கிறார்கள். தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பூமிக்கு அடியில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இவர்கள் பதுங்கியிருக்கிறார்கள். உள்ளூர்வாசிகளால் நிரம்பி வழியும் இந்த மெட்ரோ நிலையங்களில் உணவு, குடிநீர் என்று அனைத்துக்கும் தட்டுப்பாடு. அத்துடன் கடுங்குளிரும் வாட்டி வதைக்கிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மூள்வதற்கான அபாயம் பல நாள்களாகவே நிலவிவந்தது என்றாலும், பேச்சுவார்த்தை மூலம் இந்த அபாயம் தவிர்க்கப்படும் என்றே எல்லோரும் நம்பினார்கள். அதனால்தான் உயர்கல்வி நிறுவனங்கள் பலவும் விடுமுறை அறிவிக்கவில்லை. ‘உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும்’ என்று பிப்ரவரி 15-ம் தேதியே நம் இந்திய அரசு அறிவித்தது. என்றாலும், தேர்வுகள் நெருங்கிவிட்ட நேரத்தில் நாடு திரும்புவதற்கு நம் மாணவர்கள் தயங்கினார்கள். இன்னொரு புறம் விமானக் கட்டணமும் கடுமையாக உயர்ந்தது.

திடீரெனப் போர் மூண்டுவிட்ட சூழலில், போக்குவரத்தும் தடைபட்டிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் ருமேனியா மற்றும் போலந்து நாடுகள் வழியே இந்திய அரசு மாணவர்களை மீட்கிறது. உக்ரைனின் மேற்குப் பக்கத்தில் இருக்கும் அந்த எல்லையை அடைவது, கிழக்கு நகரங்களில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு சிக்கலாக உள்ளது.

குண்டுவீச்சுக்கு நடுவே பிள்ளைகள் சிக்கியிருக்க, அவர்கள் படும் பாட்டினைத் தாங்க முடியாமல் பல பெற்றோர்கள் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில், `நம் நாட்டிலேயே படிக்காமல் எதற்கு இவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும். அப்படிப் போனவர்கள் இப்படித்தான் அவதிப்பட வேண்டியிருக்கும்’ என்று பலர் அமிலத்தை உமிழ்வதைக் கேட்க நேரிடுகிறது.

உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், கல்வியைத் தேடிப் பல நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது சாதாரணமாகிவிட்டது. மருத்துவம் படிக்க முன்னாள் சோவியத் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அதிகம் பேர் செல்கிறார்கள். இந்தியாவில் நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவில் மருத்துவம் படிப்பதற்கு ஓராண்டுக்கு ஆகும் செலவில், ஒட்டுமொத்த மருத்துவப் படிப்பையும் முடித்துவிட முடியும் என்ற விஷயமே அந்த நாடுகளை நோக்கிப் பலரை ஈர்க்கிறது. பல சிரமங்களைத் தாங்கிக் கொண்டு நம் மாணவர்கள் அங்கு படிக்கப் போகிறார்கள். இந்தச் சூழலைப் பார்த்துவிட்டே, மருத்துவத்துறையில் தனியார் நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி இப்போது அழைப்பு விடுத்திருக்கிறார். மருத்துவச் சுற்றுலாவாக பல நாட்டினர் வந்து குறைந்த கட்டணத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறை சேவையாற்றிவருகிறது. மருத்துவக்கல்வியும் அப்படிக் கிடைக்க வேண்டும். குறைந்த செலவில், தரமான மருத்துவக்கல்வி எளிய குடும்பங்களின் மாணவர்களுக்கும் கிடைக்கும் சூழல் விரைவிலேயே அமையட்டும்.

யுத்த பூமியாக விளங்கிய ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டதில் நம் அரசுக்குப் பெரும் பங்கும் அனுபவமும் உண்டு. சவால்களும் துயரங்களும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுவர வேண்டும். அரசுகள் நம்மைக் கைவிடாது என்ற நம்பிக்கையில், நம் மாணவர்கள் யுத்த பூமியில் காத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்.