Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாததாகி வருகிறது

நமக்குள்ளே...

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாததாகி வருகிறது

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

பாலினப் பாகுபாடுகளால் செய்யப்பட்ட ஆதி உலகம், அப்படியேதான் இன்னமும் சுழன்றுகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், பெண்களின் விடுதலைக்கு, சுதந்திரத்துக்கு, உரிமைக்கு இன்னும் நிகழ்த்தப்பட வேண்டிய போராட்டங்கள் என்னென்ன என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவும், அதற்கான செயல் திட்டங்களை உலகம் முழுக்க ஒருங்கிணைந்த குரல்களில் பரிமாறிக்கொள்ளவும் வகுக்கப்பட்ட நாள்... மார்ச் 8 மகளிர் தினம்.

இன்று, நுகர்வு நிறுவனங்களின் விற்பனை விளம்பரங்கள், ‘பெண் என்பவள்...’ என்று ஆரம்பித்து பாசம் பிழியப்படும் சோஷியல் மீடியா பதிவுகள், ‘இந்த நாளில் உங்கள் அம்மா / மகள் / மனைவியை...’ என்று ரொமான்ட்டிசைஸ் செய்யும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் என்றெல்லாம், மகளிர் தினம் உருவாக்கப் பட்டதன் நோக்கம் சிதைந்து வருகிறது. போராட்டக்களத்தில் தோன்றியதுதான் மார்ச் 8. அதன் நோக்கங்கள் முழுமையாகக் கைகூட இன்னும் நூற்றாண்டுகள்கூட ஆகலாம். ஆனால், அதற்குள்ளாக, வெற்றிப் பூக்களுடன் கொண்டாடப்படும் நாளாக மெள்ள மாற்றப்பட்டுவிட்டது. இதைச் சுட்டிக்காட்டி, அதைச் சரியான வழிக்குத் திசைதிருப்ப வேண்டியது அவசியம். களையப்பட வேண்டிய பெண்களின் பிரச்னைகளை சபைக்கு அனுப்பும் நாளாக அல்லவா இதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் தோழிகளே?! அந்த வகையில் அவள் விகடன் இந்த மார்ச் 8-ல் முன்னெடுக்கும் பிரசாரம்... #StopExploitingWomen

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாததாகி வருகிறது. ‘பணியிடங்களில் பெண்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 7.5%-லிருந்து 9% ஆக உயர்த்தும்; அதன்மூலம் 2025-ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி (GDP Gross Domestic Product) 700 பில்லியன் டாலராக அதிகரிக்கும்’ என்கிறது உலக வங்கியின் அறிக்கை. தங்கள் உழைப்பின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் பெண்களுக்கு, பணியிடங்களில் உரிய அங்கீகாரம், உரிமை, பாதுகாப்பை உறுதி செய்வது அரசின், நிறுவனங்களின் கடமை. பெண்களுக்கு இவை கிடைக்காத சூழலையும், அவர்கள் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாவதையும், அதற்கான தீர்வுகளையும் பேசுவதே அவள் விகடனின் #StopExploitingWomen பிரசார நோக்கம்.

‘அலுவலகத்தில் என் வேலை தாண்டியும் பல வேலைகளைப் பார்க்க வைக்கிறார் டீம் லீடர்’, ‘பெர்சனல் சாட்டில் மெசேஜ் அனுப்பியதற்கு ரிப்ளை அனுப்பவில்லை என்றால் அப்ரைசலில் எதிரொலிக்கும் என்று மிரட்டுகிறார் மேனேஜர்’, ‘பேறுகால விடுப்பு, சம்பளமெல்லாம் எங்கள் நிறுவனத்தில் கிடையாது’, ‘ஒரே பணியைத்தான் செய்கிறோம். ஆனால், ஆண் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் வேகமாக நடக்கிறது’, ‘அலுவலகத்தில் பெண்களுக்கு இரவு ஷிஃப்ட் உண்டு. ஆனால், வாகன ஏற்பாடு இல்லை’ - இப்படி அலுவலகம்தோறும் நிறைந்திருக்கின்றன பெண்களுக்கு எதிரான பாலினப் பாகுபாடுகள்.

‘உங்கள் உழைப்பு வேண்டும். ஆனால், உங்கள் உரிமைகளைக் கண்டுகொள்ள மாட்டோம், கொடுக்க மாட்டோம்’ என்று நடந்துகொள்ளும் நிறுவனங்களை நோக்கி கேள்விகளைத் தொடங்குவோம்; பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்டல்களுக்கான தீர்வை நோக்கி நகர்வோம். அதை வலியுறுத்தி இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் ‘உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை... #StopExploitingWomen’ கட்டுரையின் தொடர்ச்சியாக,

மார்ச் 8 அன்று விகடன் வலைதளம், அவள் விகடன் யூடியூப், அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியாகவிருக்கும் கட்டுரைகள், பேட்டிகள், சர்வேக்கள், போல்களிலும் இணைந்திருங்கள் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism