Published:Updated:

கடமைகள் காத்திருக்கின்றன!

கடமைகள் காத்திருக்கின்றன!
பிரீமியம் ஸ்டோரி
கடமைகள் காத்திருக்கின்றன!

இந்திய ஜனநாயகம் அடித்தளத்தில் இருந்தே வலுப்பெறுவதற்கும் அதிகாரம் பரவலாவதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் திறம்பட இயங்கவேண்டியது முக்கியம்.

கடமைகள் காத்திருக்கின்றன!

இந்திய ஜனநாயகம் அடித்தளத்தில் இருந்தே வலுப்பெறுவதற்கும் அதிகாரம் பரவலாவதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் திறம்பட இயங்கவேண்டியது முக்கியம்.

Published:Updated:
கடமைகள் காத்திருக்கின்றன!
பிரீமியம் ஸ்டோரி
கடமைகள் காத்திருக்கின்றன!

பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன உள்ளாட்சித்தேர்தல்கள் மூன்று கட்டங்களாக நடந்து நிறைவடைந்துள்ளன. இப்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் 21 மாநகராட்சி மேயர்கள், 138 நகராட்சித் தலைவர்கள், 490 பேரூராட்சித் தலைவர்கள் உட்பட 12,601 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். 21 மேயர்களில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் 11 பெண் மேயர்கள், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முதன்முதலாக 28 வயதேயான பட்டியலினப் பெண் மேயர் எனப் பல்வேறு சிறப்புகள் இந்தத் தேர்தல் முடிவுகளில் உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகள்.

இந்திய ஜனநாயகம் அடித்தளத்தில் இருந்தே வலுப்பெறுவதற்கும் அதிகாரம் பரவலாவதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் திறம்பட இயங்கவேண்டியது முக்கியம். ஆறாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் பல்வேறு பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. குறைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் தெரிவிக்க இயலாத நிலையில், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிப்பணிகள் முழுக்க அதிகாரிகளை நம்பியே இருந்தன. மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றிருப்பதால் பணிகளை முழுவீச்சுடன் முடுக்கிவிட இயலும். உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாத நிலையில் மத்திய அரசின் நிதியை சில துறைகளுக்குத் தமிழக அரசு பெற இயலாத நிலையும் இனி மாறும்.

சென்ற ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், அவற்றையெல்லாம் களைந்து கிராமங்களின், நகரங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதைக் கிராமங்கள் வரையில் பரவலாக்கி நடைமுறைப்படுத்துவது, ஒருநாள் மழைக்கே சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளக்காடாக மாறும் அவலத்துக்குத் தீர்வு காண்பது, உள்ளூரில் நடக்கும் பிரச்னைகளுக்கும் உலகளவிலான சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொண்டு தங்கள் பகுதியில் பணிகளைத் திட்டமிடுவது, சாலைகள், குடிநீர், தூய்மைப்பணிகள் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தன்னிறைவு பெற்ற கிராமங்களையும் நகரங்களையும் உருவாக்குவது என ஏராளமான கடமைகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உண்டு. இதைச் செய்யும்போது முறைகேடு மற்றும் மிரட்டல்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஈடுபடுவதாக தொடர்ச்சியாகப் புகார்கள் வந்துள்ளன. அப்படிப்பட்ட புகார்கள் எழாத அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் இனி இருக்க வேண்டும்.

கடமைகள் காத்திருக்கின்றன!

பெரும்பாலான பொறுப்புகளை ஆளுங்கட்சியான தி.மு.கவே கைப்பற்றியுள்ளது. என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்திருக்கும் வார்டுகளுக்கும் போதுமான நிதியை ஒதுக்கிப் பணிகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்களுக்கு உண்டு. ‘தி.மு.க-வுக்கு வாக்களிக்காவிட்டால் நீங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் புறக்கணிக்கப்படுவீர்கள்’ என்று மூத்த அமைச்சர் ஒருவரே தேர்தல் பிரசாரத்தில் மிரட்டல் தொனியில் பேசியதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முதல்வரின் கடமை. இரண்டு ஆண்டுகளாகவே கொரோனாவைக் காரணம் காட்டி நடத்தப்பெறாமல் இருக்கும் கிராமசபைக் கூட்டங்களை இனி முறையாக நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் மன்றக் கூட்டங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்களுக்கும் வாய்ப்பும் மதிப்பும் அளிக்கவேண்டும்.

இன்னும் ஏராளமான கடமைகள் காத்திருக்கின்றன. மக்கள் பணி தொடரட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism