Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

தலையங்கம்

பெண்களை ஜட்ஜ் செய்வது இந்தச் சமூகம் செலுத்தக்கூடிய எளிமையான ஆதிக்கம். ஏனெனில், அதை எதிர்த்து ஒலிக்கும் குரல்கள் குறைவு. அப்படி குரல் எழுப்பும் பெண்களையும் ‘திமிர் பிடித்தவள்’ என்று லேபிள் ஒட்டும் ‘பிளான் பி’யும் இந்தச் சமூகத்திடம் தயாராக இருக்கும். எனில், அந்தத் திமிரை பிடித்துக்கொள்வோம் தோழிகளே தவறில்லை. நம் விருப்பம், முன்னேற்றம், சுயமரியாதை, ஆசைப்படும் வாழ்க்கை இவற்றுக்கான முடிவுகளை நாம் எடுக்கும்போது, சமூக மதிப்பீடுகளால் நாம் பின்னிழுக்கப்படாமல் இருப்பதற்கான கேடயமாக இருக்கட்டும் அவர்கள் சொல்லும் ‘திமிர்’.

சிவப்பு நிற லிப்ஸ்டிக், ஸ்லீவ்லெஸ் ஆடை என்று தன்னை பொலிவாக்கிக்கொள்ளும் பெண்ணை உடனே தராசில் தூக்கிப்போடுபவர்களுக்கு, அந்த அலங்காரம் அவளுக்குத் தரும் தன்னம்பிக்கை பற்றி புரிந்துகொள்ள மனமிருக்காது; திருமணமாகி ஒரு சில வருடங்களில் ‘விசேஷம் இல்லையா...’ என்று கேட்பவர்களுக்கு, கேட்கப்படுபவளின் உடல், மன வலிகள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள நேரமிருக்காது; ஆறு மாத கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று திரும்பும் பெண்ணின் தாய்மையை மதிப்பீடு செய்பவர்களுக்கு, எந்தச் சூழ்நிலையில் அவள் அப்படி ஓடிக்கொண்டிருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமிருக்காது; தன் குழந்தையுடன் மறுமணம் செய்துகொள்பவளின் முடிவு குறித்து, ‘இது தேவையா?’ என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, ஒரு துணை அவளுக்கு எந்தளவுக்குத் தேவை என்பதை உணர்வதற்கு மனதே இருக்காது.

நமக்குள்ளே...

இப்படி ஆடையிலிருந்து வேலை, வாழ்க்கை என்று பெண்ணின் ஒவ்வொரு தேர்வும் முடிவும் இங்கு ஜட்ஜ் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தன் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவாத, வேடிக்கை மட்டுமே பார்த்து வாய்க்கு வந்ததைப் பேசும் அந்த ‘நாலு பேரு’ என்ன சொல்வார்களோ என்ற மதிப்பீடுகளுக்கு அஞ்சி, அதை மீறத் துணிவின்றித் தேங்கிவிடும் பெண்கள்தானே இங்கு பெரும்பான்மை தோழிகளே? இன்னொரு பக்கம், ‘என்ன வேணாலும் சொல்லிக்கோங்க, என் வாழ்க்கை, என் முடிவு’ என்று சுதந்திர சிறகைத் தங்களுக்குப் பூட்டிக்கொண்டு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் பெண்கள்... நமக்கும் தைரியமும் நம்பிக்கையும் தருகிறார்கள்.

இந்த மகளிர் தினச் சிறப்பிதழின் ‘என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை’ கட்டுரையில், அடக்குமுறையான சமூக மதிப்பீடுகளைக் கடந்து வந்ததால் தாங்கள் அடைந்திருக்கும் வெற்றி மற்றும் மகிழ்ச்சி பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்கள் பல்துறை பெண்கள். விகடனின் டிஜிட்டல் தளத்தில், மகளிர் தினத்தன்று இன்னும் பல செலிபிரிட்டி பெண்களும் தங்களின் அந்த அனுபவங்களைப் பகிரவிருக்கிறார்கள்... இணைந்திருங்கள். உங்கள் அனுபவங்களையும் அவள் விகடனுடன் இணைந்து பகிருங்கள்.

நீங்கள் மறுத்த பழைமைக்காகவும், எடுத்த புது முடிவுக்காகவும் தினம் தினம் மதிப்பீடு செய்யப்படும் தோழிகளுக்கு அன்பும் வாழ்த்துகளும். உங்கள் முடிவின் பின்னுள்ள நியாயமான காரணங்களை நாங்கள் அறிய மாட்டோம். என்றாலும், உங்கள் வாழ்க்கைக்கு எது எந்தளவுக்கு முக்கியமானது என்பதை புரிந்துகொள்வோம். மேலும், இந்தச் சமூகத்திடம் அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்...

#StopJudgingWomen #DontJudgeMe

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்