Published:Updated:

கவனத்தைக் குறைக்க வேண்டாம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

கவனத்தைக் குறைக்க வேண்டாம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகத்துக்கு மார்ச் 12-ம் தேதி முக்கியமான நாள். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா மரணங்களே நிகழாத நாள் அது. இந்தப் பூஜ்ஜிய மரண தினத்தில், தினசரி புதிய கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500-க்கும் கீழே குறைந்துள்ளது. சில மாவட்டங்களில் புதிய நோயாளிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது, கொரோனா வைரஸின் வீரியம் குறைந்திருப்பது, கணிசமான அளவு தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பது ஆகியவையே இதற்குக் காரணம்.

இந்தியா முழுக்கவே சூழல் கட்டுக்குள் வந்துள்ளது. ஒமைக்ரான் உருமாற்ற கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் தினசரி பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டியிருந்தது. இந்தியாவில் கொரோனா வீரியத்துடன் பரவ ஆரம்பித்து 670 நாள்களுக்குப் பிறகு இப்போது தினசரி பாதிப்பு மூன்றாயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

இருந்தாலும், சில தகவல்களை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். சீனாவிலிருந்துதான் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியது என்றாலும், சீனா சந்தித்த கொரோனா இழப்புகள் மிகவும் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளாக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையுடன் சீனா நோயைக் கட்டுப்படுத்தி வந்தது. லேசான பாதிப்பு ஏற்பட்டாலே, கடுமையான ஊரடங்கு, நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் என்று தீவிர நடவடிக்கைகள் எடுத்துவந்தது. இன்றோ, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு கொரோனாத் தொற்று வீரியத்துடன் பரவுகிறது. கிட்டத்தட்ட 19 மாகாணங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங், ஷாங்காய் போன்ற சர்வதேசத் தொடர்புள்ள நகரங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் ஜெர்மனியில் புதிய கொரோனா அலை பரவியிருப்பதை பாதிப்புகள் உணர்த்துகின்றன. பிரான்ஸ் நாடும் இதேபோன்ற சூழலைச் சந்தித்திருக்கிறது. பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளும் தீவிர கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறுகின்றன.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் ஃபைஸர் தடுப்பூசி நிறுவனம் இப்போது நான்காம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பரிந்துரை செய்துள்ளது.

இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கொரோனாவின் தீவிரம் குறைந்ததுமே, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பலருக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட அத்தனை கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ‘பொது இடங்களில் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று பலர் கோருவதைப் பார்க்க முடிகிறது. கொரோனாவின் வீரியம் குறைந்திருக்கிறது; அது சமூகத்திலிருந்து முழுமையாக அகன்றுவிடவில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism