பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களைக் கபளீகரம் செய்ய இந்த நொடிவரை பல பெரும் நிறுவனங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன.

காரணம், அந்த பூமிக்குள் புதைந்துகிடக்கும் இயற்கை எரிவாயு, ஹைட்ரோகார்பன், பெட்ரோல் உள்ளிட்ட இயற்கை வளங்கள். அந்தத் துடிப்புக்கு சற்றே தடைபோட்டிருக்கிறது தற்போது தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம்.’ ‘ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களுக்குச் சோறு போட்டுவரும் டெல்டா பகுதி விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாகத்தான் இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், ‘ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள திட்டங்களுக்கு எந்தத் தடையும் இல்லை’ என்றும் இந்தச் சட்டத்தில் உத்தரவாதம் அளித்திருப்பது ‘பிறகெப்படி இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்க முடியும்?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டு விழா, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பாராட்டு விழா என டெல்டாவில் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. அடுத்தபடியாக, ‘தஞ்சைத் தரணியை மீட்ட ராஜராஜ சோழனே...’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் விழா எடுக்கக்கூடும். ஆனால், தற்போதைய நடவடிக்கைகள் எதுவும் பாராட்டுவிழா நடத்தும் அளவுக்குத் தகுதியானவை அல்ல என்பதுதான் உண்மை.

ஏற்கெனவே பெட்ரோலியக் கிணறுகள், ஹைட்ரோகார்பன் கிணறுகள் போன்றவை காரணமாகவும், வரைமுறையின்றி நிலத்தடிநீர் பயன்படுத்தப்படுவதாலும் டெல்டா பகுதியின் பல இடங்களில் நிலத்தடிநீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அதைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் இல்லை. தொடர்ந்து ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுவதால், மண்ணும் நிலத்தடி நீரும் மாசுபட்டுப் போயிருக்கின்றன. இவற்றையெல்லாம் சரிப்படுத்துவதற்கு எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பிரச்னைகளையெல்லாம் சரி செய்திருந்தால் இந்தப் பாராட்டு விழாக்களுக்குப் பொருள் உண்டு. ஆனால், பொறுப்பானவர்கள் இவற்றை உணர்ந்ததாகத் தெரியவில்லையே!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு