Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

இப்படி சர்வதேசப் பெண்களின் குரல்கள், இந்தியாவின் பக்கம் உலகைத் திருப்ப, பதறிய இந்திய வெளியுறவுத்துறை ‘இந்தியாவின் ஒற்றுமை’ பற்றி விளக்க அறிக்கை வெளியிட்டது.

நமக்குள்ளே...

இப்படி சர்வதேசப் பெண்களின் குரல்கள், இந்தியாவின் பக்கம் உலகைத் திருப்ப, பதறிய இந்திய வெளியுறவுத்துறை ‘இந்தியாவின் ஒற்றுமை’ பற்றி விளக்க அறிக்கை வெளியிட்டது.

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே
த்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் நம் உழுகுடியினர். 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் அவர்களை அரசு துச்சமென நடத்தும் சூழலில், ‘ஆளுமைகள்’ பலரும் வாய் மூடியிருக்கிறார்கள். இச்சூழலில், விவசாயிகளின் போராட்டத்துக்கான ஆதரவு, ஆளும் அரசுக்கான எதிர்ப்பு என சரவெடியாக வெடிக்கின்றன பெண்களின் குரல்கள். தேசத்தையும் உலகத்தையும் டெல்லியைக் கவனிக்க வைக்கின்றன அவர்களின் உக்கிர வார்த்தைகள்.

இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து அமெரிக்க பாப் பாடகி ரியானா ட்விட்டரில், ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று பதிவிட, முதல் நெருப்பு மூட்டப்பட்டது. தொடர்ந்து, ‘இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறோம்’ என்று ட்வீட் செய்தார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 18 வயதுச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ், ‘இந்திய விவசாயிகள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராகச் சீற்றம் கொள்வோம்’ என்று அந்தக் கோபத்தை ஒருங்கிணைத்தார். லெபனானைச் சேர்ந்த போர்ன் நடிகை மியா கலீஃபா, ‘டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல்’ என்று கண்டித்தார்.

இப்படி சர்வதேசப் பெண்களின் குரல்கள், இந்தியாவின் பக்கம் உலகைத் திருப்ப, பதறிய இந்திய வெளியுறவுத்துறை ‘இந்தியாவின் ஒற்றுமை’ பற்றி விளக்க அறிக்கை வெளியிட்டது. மேலும், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல இந்திய செலிபிரிட்டிகளும் மத்திய அமைச்சர்களும் இந்தப் பெண்களை, ‘இதெல்லாம் தப்புங்க, எங்க வீட்டு பிரச்னை, நாங்க பார்த்துப்போம், ஒற்றுமையுடன் இருப்போம்’ என்ற ரீதியில் பதிவிட்டனர். அடுத்த வெடி, உள்நாட்டிலிருந்தே வெடித்தது. நடிகை டாப்ஸி பன்னுவின், ‘ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமைக்கு ஆட்டம் காட்டுகிறது என்றால், வலுப்படுத்த வேண்டியது உங்கள் மதிப்பைத்தான், மற்றவர்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்’ என்ற வார்த்தைகள் அமிலமாகத் தெறித்தன.

நமக்குள்ளே
நமக்குள்ளே

‘பேசாத...’ என்று காலம்காலமாக ஒடுக்கப்பட்ட பெண் குரல்கள்தான், இப்போது இந்தியாவின் முக்கியப் பிரச்னையில் அதிகார மௌனத்தைக் கிழித்துக்கொண்டிருக்கின்றன. ஆம்... இனி பெண்களின் கருத்துகளும் மேடைக்கு வந்தே தீரும், கலகம் செய்யும், புதிய விதி எழுதும்.

வீட்டில் நடக்கும் உரையாடல்களில் பெண்கள் கருத்து கூற முற்பட்டால் முறைக்கும் முகங்கள், அலுவலக மீட்டிங்குகளில் பெண்கள் பேச ஆரம்பித்தாலே, ‘என்ன புதுசா சொல்லிடப்போறாங்க’ என்ற சலிப்புடன் அதைக் கேட்கும் காதுகள் என இவற்றையெல்லாம் கடந்துதான் பேச ஆரம்பித்திருக்கிறோம்.  

வீடோ, அலுவலகமோ, நாடோ... நம்மைச் சுற்றி நம் மனசுக்கு ஒப்பாத ஒரு விஷயம் நடக்கும்போது, தயங்காமல் நம் கருத்துகளை எடுத்து வைப்போம். நம் வார்த்தைகளை இனி எங்கேயும் எப்போதும் அடக்க முடியாது, தவிர்க்க முடியாது என்ற எதிர்காலத்துக்கு... இல்லை... நிகழ்காலத்துக்கு இதோ வந்துவிட்டோம்!  

இன்னும்... இன்னும்... உரக்கப் பேசுவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்