Published:Updated:

பேசுபொருளான இரண்டு பட்ஜெட்கள்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பேசுபொருளான இரண்டு பட்ஜெட்கள்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தமிழ்நாடு அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் அனைத்துத் தரப்பு மக்களின் பேசுபொருள் ஆகியிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்து தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகளில் எவையெல்லாம் இடம்பெற்றிருக்கின்றன, எவையெல்லாம் விடுபட்டிருக்கின்றன என்ற விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன. ‘பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பட்ஜெட்’ என்று ஒருபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ‘வெறும் வாய்ப்பந்தல்’ என்று இன்னொருபுறம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

வரவேற்கத்தக்க பல அம்சங்களை இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படுவது, அறிவுசார் நகரம் உருவாக்கி அதில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளை அமைப்பது, ஐ.ஐ.டி உள்ளிட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் திட்டம், அடிக்கடி இயற்கைச் சீற்றங்களைச் சந்திக்கும் தமிழகத்துக்குத் தனி வானிலைக் கணிப்பு ரேடார் சிஸ்டம் அமைப்பது போன்ற பல திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.

அதேசமயத்தில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடும், பொது விநியோகத் திட்டத்துக்கான மானியமும் குறைக்கப்பட்டிருப்பது அடித்தட்டு மக்களை பாதிக்கும் செயல். ``தேர்தல் அறிக்கையில் சொன்ன `மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய்’ உரிமைத்தொகை, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிட்டு வசூலித்தல், சமையல் காஸ் சிலிண்டருக்குக் கொடுப்பதாகச் சொன்ன மானியம், வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கான திட்டங்கள் எங்கே?’’ என்ற கேள்வியும் இந்த பட்ஜெட் விவாதங்களில் பலமாகக் கேட்கிறது. இவற்றுக்கெல்லாம் உரிய பதில் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமாகக் கடன் பெறும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதும் பெருமைக்குரியது அல்ல.

பேசுபொருளான இரண்டு பட்ஜெட்கள்

தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தபடி இந்த ஆண்டு வேளாண் துறைக்கு எனத் தனியாக ஒரு முழுமையான பட்ஜெட்டையும் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு முன்பாக ‘இந்த பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும்’ என்று விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றதும் ஆரோக்கியமான விஷயம்.

‘வேளாண் மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பைத்தான் வேளாண் பட்ஜெட் என்று இந்த அரசு ஏமாற்றுகிறது’ என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியான அ.தி.மு.க வைத்திருக்கிறது. இந்த விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்துவது; ஊடுபயிர், சிறுதானியங்கள், இயற்கை விவசாயம் போன்றவற்றை ஊக்கப்படுத்துவது; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்திருக்கும் நேரத்தில், சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்த இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஒரு பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டில் மாநிலம் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அரசின் பிரகடனம். கடன்களிலிருந்து விடுபடுவதும், நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுமே பட்ஜெட்டின் இலக்காக இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் இதை நோக்கியதாக நிகழட்டும்.