தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

பெண்கள் தங்கள் வீடுகளில் செய்யக்கூடிய ‘வீட்டு வேலை’களையே அனுஜத் சித்திரித்திருக்கிறான்.

கேரளா இன்று பெருமையுடன் உச்சரிக்கும் ஒரு பெயர் - அனுஜத் சிந்து வினயல். திருச்சூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் அனுஜத் வரைந்த `என் அம்மாவும் அக்கம்பக்கத்து அம்மாக்களும்’ என்கிற ஓவியம் கேரள மாநிலத்தின் பாலின பட்ஜெட்டின் முகப்பு அட்டையை அலங்கரித்திருக்கிறது. அரசே கொண்டாடும் அளவுக்கு அந்த ஓவியத்தில் அப்படி என்ன இருக்கிறது?

பெண்கள் தங்கள் வீடுகளில் செய்யக்கூடிய ‘வீட்டு வேலை’களையே அனுஜத் சித்திரித்திருக்கிறான். பால் கறப்பது, கோழிகளுக்குத் தீனி போடுவது, துவைப்பது, துணிகளை உலரவைப்பது, தேங்காய் பறிப்பது, மீன் கழுவுவது, காய்கறி வாங்குவது, மிளகாய் காயவைப்பது, கிணற்றில் நீர் இறைப்பது, மசாலா அரைப்பது, சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீடு கூட்டுவது, தோட்ட வேலை செய்வது, குழந்தைகளைப் பேணுவது என்று தன்னைச் சுற்றியுள்ள பெண்கள் செய்யும் `நன்றியோ, ஊதியமோ அற்ற' பணிகளை ஓவியமாக வரைந்திருக்கிறான்.

சமூகம் பெண்ணுக்கானது என்று சுட்டும் ‘வீட்டு வேலைகள்’ இந்தச் சிறுவனின் மனத்தைத் தொட்டிருக்கின்றன. இந்த ஓவியத்தை வரையும்போது அனுஜத்துக்கு வயது 10. துரதிர்ஷ்டவசமாக, எந்தத் தாயை அங்கீகரிக்க வேண்டி அனுஜத் இந்த ஓவியத்தை வரைந்தானோ அந்தத் தாய், கடந்த நவம்பர் 14 அன்று இறந்துவிட்டார்.

பத்து வயதுச் சிறுவனின் கண்ணுக்குத் தெரியும் பெண் உழைப்புச் சுரண்டலை சமூகம் எவ்வளவு எளிதாகக் கடந்து செல்கிறது? குடும்பம் என்கிற அமைப்பு, வீடு, வீட்டுக்குள் செய்யும் வேலைகள்... இவை எல்லாமே பெண்ணின் கடமைகள் என்கிற கோட்பாட்டை விதித்துவைத்திருக்கும் நாம், அந்த உழைப்புக்கான அங்கீகாரத்தை எப்போதேனும் அவளுக்குத் தருகிறோமா?

நமக்குள்ளே...

தென்னாப்பிரிக்கா மற்றும் சீனப் பெண்களைவிட 40 சதவிகிதம் அதிக பணிச்சுமையை இந்தியப் பெண்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு பெண் வீட்டுவேலைக்கு மட்டுமே நாளொன்றுக்கு 352 நிமிடங்கள் செலவிடுகிறாள். அதாவது, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எந்த பலனையும் எதிர்பாராத உழைப்பு. வீட்டிலுள்ள ஆண் இதற்காகச் செலவிடுவது அதிகபட்சம் 52 நிமிடங்கள் மட்டுமே.

2020-ம் ஆண்டிலும் ஆண் செய்யும் வேலை, பெண் செய்யும் வேலை என்று பணிகளைத் தரம் பிரிப்பது ஏன்? குடும்பம், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்றவற்றைப் பெண்ணின் தலையிலேயே தொடர்ச்சியாகச் சுமத்துவது ஏன்? இவையெல்லாம் வீட்டிலும் வேலை செய்து, வெளியிலும் பணிக்குச் செல்லும் பெண்களுக்குக் கடும் அயர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகின்றன.

இந்தியாவின் பெருமையான குடும்பம் என்கிற கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் பெண்களே. இவர்களுக்குச் சரியான அங்கீகாரம் அளிப்பதோடு, பெண்களின் பணியில் தோள் கொடுக்கவும் ஆண்கள் துணைவர வேண்டும். இல்லையெனில், காலப்போக்கில் இந்த அமைப்பே சீர்குலைந்து போகும். பெண்ணின் பணியையும் உழைப்பையும் மதிக்கத் தொடங்குவோம்... வீட்டுப் பணிகளில் ஆண்களும் குழந்தைகளும் கைகொடுப்போம். ஆணின்றிப் பெண்ணில்லை; பெண்ணின்றி எதுவும் இல்லை!

நமக்குள்ளே...
நமக்குள்ளே...
நமக்குள்ளே...