Published:Updated:

மின்வெட்டுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மின்வெட்டுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கோடைவெயிலில் தமிழ்நாடு தகிக்க, பல கிராமங்களும் புறநகர்ப் பகுதிகளும் மின்வெட்டில் புழுங்கிக்கொண்டிருக்கின்றன. `தி.மு.க ஆட்சி வந்தாலே மின்வெட்டும் கூடவே வந்துவிடும்’, `செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தி, அதையே காரணம் காட்டி அதிக விலையில் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கப் பார்க்கிறார்கள்’ என்று எதிர்க்கட்சிகள் அனலைக் கூட்டுகின்றன. `மத்தியத் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்கவில்லை. தமிழக அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான அளவு நிலக்கரியை மத்திய அரசு கொடுக்கவில்லை’ என்று கூறுகிறார், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

கொரோனாக் கட்டுப்பாடுகள் எல்லாம் முடிந்து தொழில்துறையின் கதவுகள் அகலத் திறந்திருக்கும் நேரம் இது. கோடையும் கடுமையாக வாட்டுவதால், கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. மின்சாரம் இருந்தால்தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும் என்பதைத் தாண்டி, தொழிற்சாலைகளின் உற்பத்தி, விவசாயம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மென்பொருள் ஏற்றுமதி என்று அனைத்தோடும் தொடர்புடையது மின்சாரம். அதனால், குறுகிய அரசியலைக் கடந்து இந்தப் பிரச்னையை வெளிப்படைத்தன்மையோடு அணுகினால் மட்டுமே தீர்வை நம்மால் காணமுடியும்.

சர்வதேசச் சந்தையில் நிலக்கரியின் விலை ஒரே ஆண்டில் மூன்று மடங்காக விலை உயர்ந்ததால், பல மாநிலங்களும் இறக்குமதியைக் குறைத்துக்கொண்டு இந்திய நிலக்கரியை அதிகமாக வாங்கத் தொடங்கின. வட இந்தியா முழுக்க வெப்ப அலை வாட்டுவதால், நாடு முழுக்கவே மின் தேவை அதிகரித்திருக்கிறது. அதைச் சமாளிக்கும் அளவுக்கு நிலக்கரி இருப்பும், மின் உற்பத்தியும் இல்லாததே இந்தப் பிரச்னைக்குக் காரணம். இப்போது பிரச்னை தீவிரமடைந்ததும் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநிலங்களுக்கு நிலக்கரியை விரைந்து சரக்கு ரயில்களில் அனுப்புவதற்காக பயணிகள் ரயில்களைக்கூட ரத்து செய்திருக்கிறது இந்திய ரயில்வே. பற்றாக்குறையை முன்கூட்டியே உணர்ந்து இந்த நடவடிக்கைகளை முன்பே எடுத்திருந்தால், மக்கள் புழுக்கத்தில் வாடவேண்டிய சூழல் வந்திருக்காது.

மக்கள் அனலில் தவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசும், மாநில அரசும் ஒருவரை ஒருவர் கைகாட்டிக்கொண்டிருந்தால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். மின்வெட்டு என்றில்லை, எல்லாப் பிரச்னைகளிலும் இப்படி ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்லும் போக்கே தொடர்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். பிரச்னை ஏற்படுவதற்கு முன்பே மாற்றுவழிகளைத் தேட வேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல், அலட்சியப் போக்கைக் கையாள்கின்றன அரசுகள். கடைசியில் மக்கள்தான் அவதிக்கு ஆளாகின்றனர். தனிப்பட்ட விருப்புவெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தங்களின் அடிப்படைத் தேவைகளையே அலட்சியப்படுத்தும் அரசுகளைத் தூக்கியெறிய மக்கள் தயங்கமாட்டார்கள் என்பதே வரலாறு.

மாற்று வழிகளையும் ஆராய்ந்து மின் உற்பத்தியை அதிகரிப்பதும் மின் வாரியத்தைச் சீரமைப்பதுமே நிரந்தரத் தீர்வுக்கான வழி. ஒவ்வொரு கோடையையும் மின்வெட்டு நடுக்கத்திலேயே நகர்த்த வேண்டிய சூழல் மக்களுக்கு வரக்கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism