பிரீமியம் ஸ்டோரி
‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்’ என்பதுபோல கொரோனா கொடூரத்திலும் மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் ஆணையம்போல, தன்னாட்சி அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை தனது கட்டுப்பாட்டிலுள்ள ஜல்சக்தி துறையின் (மத்திய நீர்வளத்துறை) கீழ் கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்குத் தற்காலிக நிவாரணம் கொடுத்தது காவிரி மேலாண்மை ஆணையம் மட்டும்தான். அதிலும் புதுடெல்லிக்குப் புறப்பட்டுப் போய், அறம் பாடி, அழுது புரண்டதால்தான் அந்த நிவாரணமும் கிடைத்தது. இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. இதுநாள்வரை தன்னிச்சையாகச் செயல்பட்டுவந்த அந்த அமைப்பு, இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. `இனி, தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் முறையாகக் கிடைக்குமா?’ என்ற கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கிறது.

‘‘சம்பளம் உள்ளிட்ட நிர்வாக வசதிக்காக, ஆணையத்தை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறோம்’’ என மத்திய அரசு பொருத்தமே இல்லாத விளக்கத்தைச் சொல்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும், நதிநீர் ஆணையத்தின் உத்தரவுகளையும்கூட மதித்து நடக்காத கர்நாடக அரசு, மத்திய நீர்வளத்துறை சொல்லியா தவிக்கும் தமிழகத்துக்கு இனி தண்ணீர்த் தரப்போகிறது!

காவிரி நீரைக் கபட நாடகம் செய்து கர்நாடகம் வழிமறித்துக்கொள்வதால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நெல் விளையும் தஞ்சை டெல்டா பூமி காய்ந்து போகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பூகோளரீதியாக வற்றாத ஜீவ நதி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிரது. இது போதாது என்று மாநிலத்தின் பாதி மாவட்டங்கள் மழை மறைவு பகுதிகள். இதனால், பருவமழையும்கூடச் சமயத்தில் கிடைக்காமல் போகிறது.

இப்படி இயற்கையாலும் அரசியலாலும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்கு, காவிரி நீருக்கான கடைசி நம்பிக்கையாக இருந்த ஆணையத்தை மீண்டும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்றி உத்தரவிட வேண்டும். இல்லையேல், பி.ஜே.பி-யின் ‘ஒரே நாடு’ என்ற கோஷம், வெற்று கோஷமாகவே இருக்கும்.

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு