Published:Updated:

முன்னுரிமை இதற்கே தேவை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

முன்னுரிமை இதற்கே தேவை!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தேசமே கொரோனாப் பெருந்தொற்றில் தவிக்கும் இந்த நேரத்தில், புதிய நாடாளுமன்றம் கட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் வேகம் எடுத்திருப்பது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2020 டிசம்பரில் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைத் தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடம், புதிய செயலகம், பிரதமர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் இல்லம் ஆகியவை கட்டுவதற்கான திட்டம் இது.

கிட்டத்தட்ட நூறாண்டுகள் பழைமை வாய்ந்த கட்டடத்தில் நாடாளுமன்றமும் பல அமைச்சரவைச் செயலகங்களும் செயல்பட்டுவருகின்றன. ‘நாடாளுமன்றக் கட்டடத்தை நவீனமயமாக்குவதன் மூலமாக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். மேலும், புதிய கட்டடங்கள் மிகவும் வலுவானதாகவும் பூகம்பத்தைச் சமாளிக்கும் வகையிலும் இருக்கும். எனவே, இந்தத் திட்டம் தேசிய நலன் கொண்டது’ என்கிறது மத்திய அரசு. மாற்று இடம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதைச் செயல்படுத்தும் விதம் குறித்தே பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக தேசிய அருங்காட்சியகம், தேசிய ஆவணக் காப்பகத்தின் கூடுதல் கட்டடம், இந்திரா காந்தி தேசியக் கலைகள் மையம் ஆகியவை இடிக்கப்படவுள்ளன. இவற்றில் உள்ள மதிப்புமிக்க கலைப் பொக்கிஷங்கள், ஆவணங்கள் எங்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்படும், அப்படிச் செய்யும்போது அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்த திட்டமிடல் அரசுக்கு இல்லை.

‘கொரோனாப் பெருந்தொற்று தேசம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், இந்தத் திட்டம் இவ்வளவு அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டுமா’ என்ற தார்மீகக் கேள்வியைப் பலர் எழுப்புகிறார்கள். ‘சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 20,000 கோடி ரூபாயை ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை வாங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று 12 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்குக் கூட்டாகக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

கொரோனா இரண்டாவது அலையை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் எதிர்கொண்டு இப்போது தடுமாறிவருகிறோம். ‘அடுத்து மூன்றாவது அலையும் வரும்’ என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கூறியிருக்கிறார். ‘கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் அடுத்த 6 முதல் 18 மாதங்கள் முக்கியமானவை. இதுபோலவே தொற்றின் எண்ணிக்கை ஏறும், குறையும்’ என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இந்த ஆலோசனைகளைப் பரிசீலித்து, முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

தலையங்கம்
தலையங்கம்

தங்கள் நாட்டின் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி வழங்கிய நாடுகள், கொரோனாவின் அபாயத்திலிருந்து மீண்டிருக்கின்றன. மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் தடுப்பூசித் தேவை மிக அதிகம். உலகெங்கும் இருந்து தடுப்பூசிகளை வாங்கி, நம் மக்களுக்கு விரைவில் தர வேண்டியது அவசியம்.

சென்ட்ரல் விஸ்டா அவசியம்தான் என்றாலும், இப்போது முன்னுரிமை அளித்துச் செய்யப்பட வேண்டிய கடமை எது என்ற விஷயத்தில் மத்திய அரசுக்குத் தெளிவு வேண்டும்.