Published:Updated:

காப்பது கடமை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

காப்பது கடமை!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

பேரிடர் மேலாண்மை என்பது அரசின் மிகப்பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பைப் பல நேரங்களில் அரசு துறந்துவிடுகிறது. அதனால்தான், இயற்கைச் சீற்றங்களோ, கொரோனா போன்ற நோய்ச் சீற்றங்களோ... முன்னேற்பாடுகள் செய்வதை மறந்துவிட்டு, கடைசி நிமிடத்தில் தீர்வுகள் தேடுகிறோம். கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமிபோல இந்தியாவைத் தாக்கியிருக்கும் இந்த நேரத்தில், ஆக்சிஜன் தட்டுப்பாடு மக்களை வதைக்கிறது. தலைநகர் டெல்லி தொடங்கி பல மாநிலங்களில் தீவிர பாதிப்புடன் வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாததால், பல உயிர்களை வாரிக் கொடுத்திருக்கிறோம். ஆக்சிஜன் இல்லாததால் நோயாளிகளை அனுமதிக்க மறுப்பதும், சிகிச்சையில் உள்ள நோயாளிகளைக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்வதும் ஜீரணிக்க இயலாத வேதனை.

‘தட்டுப்பாடே இல்லை’ என ஆரம்பத்தில் சமாளிக்கப் பார்த்த மத்திய அரசு, தன் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்து, செயலில் இறங்கியிருக்கிறது. திரவ ஆக்சிஜனைத் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு அனுப்புவது மொத்தமாகத் தடைசெய்து, மருத்துவத் தேவைக்குத் திருப்பி விட்டிருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி ஒரு மூலையிலும், தேவைக்காகத் தவிக்கும் மருத்துவமனைகள் இன்னொரு மூலையிலும் இருக்கின்றன. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் க்ரையோஜெனிக் டேங்கர் லாரிகளை மிக விரைவாக ரயில்களில் ஏற்றிச் செல்கிறது இந்திய ரயில்வே. இதற்காக ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்புச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளுக்குப் பற்றாக்குறை இருப்பதால், சிங்கப்பூரிலிருந்து லாரிகளை எடுத்து வந்துள்ளன, இந்திய விமானப்படை விமானங்கள். இந்தியா முழுக்க 551 மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் மினி ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்களை நிறுவுவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. வென்டிலேட்டர்களையும் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் கருவிகளையும் அனுப்புகிறது பிரிட்டன். மொபைல் ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகளை அனுப்புகிறது ஜெர்மனி. உபரியாக ஆக்சிஜன் வைத்திருக்கும் பல நாடுகளும் இந்தியாவுக்கு அதை அனுப்ப உள்ளன. 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நம் மாநிலங்களுக்கு இடையிலும் இதேபோன்ற பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. தங்கள் மாநிலத்தில் உள்ள உபரி ஆக்சிஜனை டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா எனத் தேவை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது ஒடிஷா. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதைப் பெரும்பாலான தமிழகக் கட்சிகள் எதிர்த்தாலும், தேசத்தின் ஆக்சிஜன் தேவையை உணர்ந்து அதன் உற்பத்திக்காக மட்டும் ஆலையைத் திறக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படி எல்லாப் பக்கங்களிலிருந்தும் நீளும் கரங்கள் நம்பிக்கை அளிக்கின்றன.

தலையங்கம்
தலையங்கம்

2020 அக்டோபர் மாதமே 162 மினி ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்களை இந்தியா முழுக்க நிறுவுவதற்கு டெண்டர் விட்டது மத்திய அரசு. இது முழுமை பெறவில்லை. ‘ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது’ என சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2020 நவம்பர் மாதமே எச்சரித்தது. அது யார் காதிலும் விழவில்லை. சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியில் ஏராளமான உயிர்களைப் பலிகொடுத்துள்ளோம். நிலைமை கைமீறிப்போனாலும் இப்போதாவது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மே மாதத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் உச்சமாகும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அப்போது தேவை இன்னும் அதிகமாகலாம். அதை உணர்ந்து, முன்கூட்டியே கட்டமைப்புகளை இப்போதாவது செய்துவைக்க வேண்டும். மக்களைக் காப்பதே அரசின் கடமை.