Published:Updated:

புதிய வாசல்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

`நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு’ - தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறுவதற்கான புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது.

தனியார் பள்ளியோ... அரசுப்பள்ளியோ... பெரும்பாலான குழந்தைகளின் கனவு, மருத்துவப் படிப்புதான். தனியார் பள்ளிக் குழந்தைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் இந்தக் கனவு ஈடேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அது கனவாகவே கரைந்துவிடும் என்பதுதான் யதார்த்தம்.

தனியார் பள்ளிக்குழந்தைகளைப் பெற்றோர் ஆறாம் வகுப்பிலிருந்தே இதற்கெனத் தயார்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அதிலும், ‘நீட் தேர்வு’ வந்தபிறகு, இந்தத் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தனியாக ‘நீட் பயிற்சி மையங்கள்’ ஒருபக்கம் களைகட்ட, தனியார் பள்ளிகள் பலவற்றிலும் பள்ளிக்கூட வகுப்புடன் சேர்த்து, ‘நீட்’ சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே என்பதால், நீட் தேர்வுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, மருத்துவப் படிப்பில் கால் பதிக்கமுடியாத நிலைதான் நீடிக்கிறது. ‘அரசுப்பள்ளிகளில் பயிலும் 83% மாணவர்களின் பெற்றோர் தினக்கூலிப் பணியாளர்களே’ என்கிறது, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி கலையரசன் குழு. இத்தகைய சூழலில், பல்லாயிரக்கணக்கில் பணம் செலுத்தி அவர்களால் எப்படிப் பயிற்சி பெற இயலும்?

அரசுப்பள்ளி மாணவர்களின் இந்தப் பரிதாப நிலையைப் பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தியபடியே உள்ளன. அதிலும், நீட் தேர்வுக்குப் பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களின் பரிதாப நிலையானது, பல்வேறு தளங்களிலும் விவாதப் பொருளாகவே மாறிக்கிடக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இத்தகைய சூழலில், யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டுவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை அவசரச் சட்டமாகவே கொண்டுவந்து, அரசுப்பள்ளி மாணவர்களிடையே புதுநம்பிக்கையைப் பாய்ச்சியிருக்கிறார். இதேவேகத்தில், இந்தச் சட்டத்துக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பதும் அவசர அவசியம்!

இந்த இட ஒதுக்கீடு ‘நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான்’ என்பதால், அந்த மாணவர்களுக்குத் தரமான பயிற்சி கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்த உண்மையை உணர்ந்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே அர்ப்பணிப்பு உணர்வோடு தத்தமது பள்ளி மாணவர்களைத் தயார்படுத்த முன்வர வேண்டும்.

பாதையோ கடினமானது... பயணமோ நீளமானது. வழிகாட்ட இப்போது சிறுவிளக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் இலக்கை அடைய அனைவரும் துணைநிற்போம்!