Published:Updated:

வருக வருக 2021

2021
பிரீமியம் ஸ்டோரி
2021

தலையங்கம்

வருக வருக 2021

தலையங்கம்

Published:Updated:
2021
பிரீமியம் ஸ்டோரி
2021

ஆனந்த விகடன் வாசகர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள், கடைக்காரர்கள், விற்பனையாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற நினைப்புடன் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது இயல்பு. புத்தாண்டையும் அப்படி வரவேற்பது பொருத்தமாக இருக்கும். எந்தப் புத்தாண்டையும்விட 2021 ஏராளமான எதிர்பார்ப்புகளைச் சுமந்திருக்கிறது. 2020 நமக்குத் தந்த அனுபவங்களே இதற்குக் காரணம்.

கொரோனாப் பெருந்தொற்று பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது. ‘உடல்நலம்தான் எல்லாவற்றையும்விட முக்கியமான செல்வம்’ என்பதை அழுத்தமாக உணர்ந்திருக்கிறோம். எப்போதையும்விட அதிகமாக மருத்துவம் பற்றிப் பேசினோம். ஆரோக்கியமான உணவுகள் பக்கம் திரும்பினோம்.

வருக வருக 2021

உழைப்பதற்காக ஓடிக்கொண்டே இருந்த பலருக்குத் திடீர் ஓய்வு கிடைத்தது. குடும்பத்துடன் நேரம் செலவிட முடிந்தது. வீட்டிலிருந்தே பணிபுரியும் புதிய இயல்புக்குப் பலர் பழகினார்கள். அலுவலகச் சூழல், வேலை, வாழ்க்கைமுறை என எல்லாவற்றையும் கொரோனாக் காலகட்டம் மாற்றிப் போட்டிருக்கிறது.

இன்னொருபுறம் அன்றாடத் தேவைகளை ஒவ்வொரு நாளும் உழைத்து சமாளித்த அடித்தட்டுக் குடும்பங்கள் திணறித் தவித்தன. தொழில் முடக்கம், வேலையிழப்பு என நேரடிப் பொருளாதாரத் தாக்குதலில் அவர்கள் நிலைகுலைந்தார்கள். இன்னமும்கூட மீண்டுவர முடியாமல் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்.

இயல்பாக சக நண்பர்களுடன் பழகி வகுப்பறையில் கல்வி கற்கும் சூழல் மாணவர்களுக்கு வாய்க்கவில்லை. ஒருபக்கம் ஆன்லைன் வகுப்புகளுக்கு சிலர் பழகிவிட, இப்படிக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காத அடித்தட்டு மற்றும் கிராமப்புற மாணவர்கள் இன்னொரு பக்கம் இருக்கும் சூழல். கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வை, கொரோனாச் சூழல் பெரிதாக்கியுள்ளது.

இந்த நாள்களில் நமக்கு நம்பிக்கையை விதைத்தவர்கள் பலர். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று பலரும் தன்னலம் கருதாமல் சேவை புரிந்தார்கள். தன்னார்வலர்கள் பலர் வீதிகளில் இறங்கி உதவிக்கரம் நீட்டினர். இந்த அக்கறையே, கொரோனா அச்சத்தைத் துரத்தியது.

ஒரு புதிய நோய்க்குத் தடுப்பூசி உருவாகப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், மருத்துவ உலகம் புது வேகத்தில் களமிறங்கி, ஒரே ஆண்டுக்குள் கொரோனாத் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்குத் தந்திருக்கிறது. பிரிட்டனில் வடிவெடுத்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் நம் ஊர் வரை வந்து அச்சத்தை ஏற்படுத்தினாலும், ‘‘இது கொரோனாத் தொற்று பரவும் வேகத்தை அதிகரித்திருக்கிறதே தவிர, ஆபத்தானதாக மாறிவிடவில்லை. தடுப்பூசிகள் இதிலிருந்தும் நம்மைக் காக்கும்’’ என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா நம்பிக்கை தருகிறார்.

‘அனுபவங்களே சிறந்த ஆசிரியர்’ என்பார்கள். கொரோனாக் காலம் பல நல்ல பாடங்களை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அவற்றை இனிவரும் ஆண்டுகளிலும் பின்பற்றுவோம். அனைவரின் வாழ்விலும் இனிய மாற்றங்கள் ஏற்படும், தொழில் வளர்ச்சி முன்பைப்போல் அதிகரிக்கும், நம் பொருளாதார நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம்.