சினிமா
Published:Updated:

ஆலயநகைகளில் அவசரம் கூடாது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கோயில் நகைகளை உருக்கித் தங்கக்கட்டிகளாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்குத் தடை விதித்திருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு அப்போதே எதிர்ப்பு எழுந்தது. வழக்குகளும் தொடரப்பட்டன. என்றாலும், அக்டோபர் 13-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். எதிர்ப்புகளைக் கையாளும்விதமாக அரசுத் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. ‘இது ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் இருக்கும் ஒரு நடைமுறைதான். கோயில்களில் பாரம்பரியமாக வழிபாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் நகைகளை அரசு எதுவும் செய்யாது. கடந்த 10 ஆண்டுகளாக உண்டியலிலும் காணிக்கையாகவும் கோயில்களுக்குச் செலுத்தப்பட்ட நகைகள் குறித்து முறையாகக் கணக்கெடுப்பு நடக்கவில்லை. இவற்றைக் கணக்கெடுத்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் நகைகள் மட்டுமே உருக்கப்படும்’ என்றார், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

நீதிமன்றத்திலும் அரசுத்தரப்பில் இதேபோன்ற ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. ‘இதைப் புதிதாக அரசு செய்யவில்லை. கடந்த 1977-ம் ஆண்டு முதல் இப்படி 500 கிலோ நகைகள் உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 11 கோடி ரூபாய் வட்டி வருகிறது. இந்தப்பணம் கோயில்களின் பராமரிப்புக்கே பயன்படுத்தப்படுகிறது. கோயில்களில் நகைகளைக் கணக்கெடுக்கும் பணிகளைத் துரிதப்படுத்த சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களுக்குத் தனித்தனி ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இருக்கும் மத்திய அரசின் தங்க உருக்காலையில் இவற்றை உருக்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் டெபாசிட் செய்யப்படும்’ என்று அட்வகேட் ஜெனரல் விளக்கமளித்தார். என்றாலும், ‘கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்காமல் நகைகளை உருக்குவது சட்டவிரோதமானது’ என்ற வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இதற்குத் தடை விதித்தனர். நகைகளைக் கணக்கெடுக்கும் பணியை மட்டும் தொடர உத்தரவிட்டனர்.

தலையங்கம்
தலையங்கம்

ஆரம்பம் முதலே இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்தும், வெளிப்படைத் தன்மை குறித்தும், சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. அறங்காவலர்கள் மற்றும் பக்தர்களின் பங்கேற்பு இல்லாமல் நகைகளின் கணக்கெடுப்பு நடந்தால், அது வெளிப்படையாக நடைபெறுமா? நீதிபதிகள் எல்லா நேரங்களிலும் இதைக் கண்காணிக்க முடியுமா? ஒரு நகை தேவையுள்ளதா, தேவையில்லாததா என்பதை முடிவு செய்வது யார்? நகைகளின் தரத்தை யார் உறுதி செய்வார்கள்? நகைகளில் இருக்கும் விலையுயர்ந்த கற்களை என்ன செய்வார்கள்? இந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதில் வேண்டும்.

பக்தியின் வெளிப்பாடாகவும், நன்றிக் காணிக்கையாகவும் பக்தர்கள் அளிக்கும் நகைகள் அனைத்தும் அந்தக் குறிப்பிட்ட ஆலயத்துக்கே சொந்தமானவை. அந்த நகைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை கடவுளின் சார்பில் அறங்காவலர்களும் பக்தர்களும் அரசும் இணைந்து முடிவெடுக்க வேண்டும். அரசு தன்னிச்சையாக ஒரு அவசர முடிவெடுத்து, அதைக் கோயில்கள்மீது திணிக்கக்கூடாது.