சினிமா
தொடர்கள்
Published:Updated:

மனிதத்துக்கு மதிப்பளிப்போம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

பேருந்தில் ஒரு கர்ப்பிணி நின்றுகொண்டிருந்தால் எழுந்து இருக்கையில் அமரவைப்பதும், ஆட்டோக்களில் ‘பிரசவத்துக்கு இலவசம்' என்று எழுதுவதும் நம் பண்பாடு. ஆனால், பிரசவ வலியால் துடித்த ஒரு பெண்ணை, அடையாள அட்டை இல்லை என்பதைக் காரணம் காட்டி மரணமடைய வைத்திருக்கும் கொடூர நிகழ்வு நாட்டையே உலுக்கியிருக்கிறது.

தமிழகத்திலிருந்து கர்நாடகா சென்று வாழ்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணிப் பெண், பிரசவ வலி ஏற்பட்டதும் துமகூருவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ உதவி கேட்டுக் கெஞ்சியபோது, ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் பிரசவம் பார்க்க முடியாது என்று மருத்துவர்கள் மறுத்திருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்ப்பதற்கோ, பக்கத்து ஊரில் இருக்கும் வேறு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வைத்துக்கொண்டு செல்லவோ வசதியில்லை என்பதால் வீடு வந்து சேர்ந்த கஸ்தூரிக்கு அடுத்த நாள் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. வயிற்றில் இருந்தது இரட்டைக் குழந்தை என்பதால் அடுத்த குழந்தை பிறப்பதற்குள் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு கஸ்தூரி இறந்துவிட அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துபோனது. முன்பு பிறந்த குழந்தையும் இறந்தது. மூன்று மரணங்கள் அடுத்தடுத்து நடந்ததுடன் தன் உறவுகளை இழந்து ஆதரவற்று நிற்கிறது, கஸ்தூரியின் 6 வயதுப் பெண்குழந்தை.

‘ஆதார் அட்டை கட்டாயமில்லை', ‘அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி அளித்துவிட்டுத்தான் பதிவேடு தொடர்பான சம்பிரதாயங்களில் கவனம் செலுத்த வேண்டும்'... இப்படி ஆயிரம் வழிகாட்டல்கள் இருந்தாலும், அவை எந்த அளவுக்கு இரக்கமற்றுப் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கான உதாரணம்தான் கஸ்தூரியின் மரணம்.

கஸ்தூரிக்கு ஏற்பட்ட அநீதியும், அநியாயமும் மாநில எல்லைகளைத் தாண்டி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கஸ்தூரிக்குப் பிரசவம் பார்க்க மறுத்துத் திருப்பி அனுப்பிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை அரசு இடைநீக்கம் செய்திருப்பதுடன், ‘அவசர சிகிச்சைக்காக வருகிறவர்களுக்கு முதலில் சிகிச்சை அளித்துவிட்டு அதன்பிறகு பதிவேடு தொடர்பான வேலைகளைப் பார்க்க வேண்டும்' என்று அரசு மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக அறிவித்திருக்கிறது.

மருத்துவ சிகிச்சை மட்டுமல்ல, மதிய உணவுத்திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது என்னவோ அடித்தட்டு மக்கள்தான். ‘அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அவசியமில்லை' என்று 2017-ல் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளபோதிலும் ஆதார் அட்டை இல்லாதவர்கள் புறக்கணிக்கப்படும் அவலம் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் அலட்சியத்தின் காரணமாக யாரோ ஓர் அப்பாவி மரணமடைந்தபிறகே நடவடிக்கையில் அரசு இறங்குவது என்பது எழுதப்படாத விதியாகத் தொடர்வது அவலம்.

‘ஓர் அட்டைக்கு இருக்கும் மதிப்பு மனிதர்களுக்குக் கிடையாதா?' என்று கஸ்தூரியின் மரணம் எழுப்பியிருக்கும் கேள்விக்கு இப்போதாவது மத்திய, மாநில அரசுகள் விடைகாண வேண்டும்.