பிரீமியம் ஸ்டோரி

முல்லைப்பெரியாறு அணைமீது மீண்டும் ஒருமுறை துரோகத்தின் நிழல் படியத் தொடங்கியிருக்கிறது. ‘இந்த அணை பலவீனமாக இருக்கிறது’ என்ற பிரசாரத்தைத் தொடர்ச்சியாகச் செய்துவருகிறது கேரள அரசு. அணையின் வலு தொடர்பான சர்ச்சைகளுக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ‘அணையில் தமிழக அரசு 142 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம். அணையை வலுப்படுத்தும் வேலைகள் முடிவடைந்ததும் 152 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கலாம்’ என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் கேரள அரசு புதிய அணை கட்டுவோம் என்று அடம்பிடிக்கிறது. இதற்காக இடம் தேர்வு செய்து அணை கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதற்குத் திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், சமீபத்தில் மீண்டும் சர்ச்சைகளின் மையப்புள்ளி ஆகியிருக்கிறது இந்த அணை. ‘அக்டோபர் 28-ம் தேதி முல்லைப்பெரியாறு அணை 138 அடியை எட்டுவதற்கு முன்பாகவே கேரள அதிகாரிகள் வந்து அணையின் நீரைத் திறந்துவிட்டனர். தமிழக நீர்வளத் துறை அதிகாரிகளின் அனுமதி இல்லாமலே இது நடந்துவிட்டது’ என்று முல்லைப்பெரியாற்றுப் பாசனப் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். எதிர்க்கட்சிகளும் இதைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்துள்ளன.

மலிவான அரசியல் வேண்டாம்!

இந்நிலையில் அணையைப் பார்வையிட்ட தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ‘`மத்திய நீர்வள ஆணையத்தின் ‘ரூல் கர்வ்’ என்ற விதிப்படி இந்த மாதத்தில் 139.5 அடி உயரம் மட்டுமே நீர் தேக்க முடியும். இதைவிட அதிக தண்ணீர் இருந்ததால், தமிழக நீர்வளத்துறைப் பொறியாளர்களால் 2 மதகுகள் திறக்கப்பட்டன. மதகுகள் திறக்கப்படும்போது கேரள அமைச்சரும் சில அதிகாரிகளும் உடன் இருந்தார்கள். கேரள அதிகாரிகள் மதகுகளைத் திறந்ததாகச் சொல்வது தவறானது’ என்று மறுத்திருக்கிறார்.

முல்லைப்பெரியாறு அணையின் ஓர் அங்கமாக இருக்கும் பேபி அணையை பலப்படுத்தினால்தான் 152 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்க முடியும். இந்தப் பணிக்குத் தடையாக அங்கு மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் 23 மரங்களை வெட்டுவதற்குத் தமிழக அரசு நீண்ட காலமாக அனுமதி கேட்டுவருகிறது. இவற்றில் 15 மரங்களை வெட்டிக்கொள்ள நவம்பர் 6-ம் தேதி கேரள வனத்துறை அனுமதி அளித்தது. இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கேரளாவின் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ‘வனத்துறை அனுமதி கொடுத்தது எங்களுக்கே தெரியாது’ என்று முதல்வரும் வனத்துறை அமைச்சர் சசீந்திரனும் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்குக் கொடுத்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது மலிவான அரசியல் விளையாட்டு தவிர வேறில்லை. அதிகாரிகள் நினைத்தால் மரம் வெட்ட அனுமதி கொடுக்க முடியும் என்கிறபோது, அரசியல்வாதிகளே இதைத் தடுக்கிறார்கள். இந்தச் சூழலில், ‘அணைக்கு யார் எத்தனை தடவை போனார்கள்’ என்று ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நடத்தும் விவாதம் எந்தப் பலனையும் தராது. தோற்றுவிட்ட ஒரு கிரிக்கெட் போட்டியின் புள்ளிவிவரங்கள் யாருக்கு வேண்டும்?

போராட்டங்கள் நடத்துவதைவிட தமிழகத்திலிருந்து அனைத்துக்கட்சிக் குழு ஒன்று கேரளா சென்று அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசி அணையை பலப்படுத்தும் வேலைகளுக்கு இருக்கும் தடைகளை நீக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை நம்பியிருக்கும் தென் மாவட்ட மக்களின் நலன் கருதி இதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு