பிரீமியம் ஸ்டோரி
சூதாட்டம் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது என்பதை இதிகாச காலம்தொட்டே உணர்ந்திருக்கிறது இந்தியா. இலக்கியங்கள், புராணங்கள் ஆகியவை சூதாட்டத்துக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தாலும் சூதாட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மக்களின் வாழ்க்கையைச் சூறையாடும் ஆன்லைன் ரம்மிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கேட்டிருந்தது. இப்போது ஆன்லைன் ரம்மியை முற்றிலும் தடை செய்வதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்கது.

ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பிப்பவர்கள் காலம் செல்லச் செல்ல ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி அதிலேயே மூழ்கிக் கிடப்பதும், கையில் இருக்கும் காசு கரைந்தபிறகு வீட்டிலேயே திருடி விளையாடுவது, வட்டிக்குக் கடன் வாங்கி விளையாடுவது என்று வாழ்க்கையே திசைமாறிப்போவதும் நகரம், கிராமம் என்ற பேதமில்லாமல் ஒவ்வொரு ஊரிலும் அரங்கேற ஆரம்பித்துவிட்டன.

திருச்சியைச் சேர்ந்த கற்குவேல் என்ற காவலர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிப் பணத்தை இழந்ததால் இரவுகளில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து, கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் திருமணத்துக்கு முன்பே ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிவிட்டார். திருமணமாகி மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழந்து கடன் தொல்லையால் அவதிப்பட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி தமிழகம் முழுவதும் ஏராளமான துயரக்கதைகள். தமிழகத்தில் 11 பேர் வரை இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

ஏற்கெனவே ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்துள்ள நிலையில் தமிழக அரசும் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிப்பது ஏராளமானோர் வாழ்க்கையில் ஒளியேற்றும். குதிரைப்பந்தயம், லாட்டரிச்சீட்டு போன்ற பல சூதாட்டங்களைத் தடை செய்த முன்னோடி மாநிலம் என்ற வகையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதோடு அதை மீறுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீமையை ஒழித்த தீபாவளி!

சூதாட்டத்தின் அபாயத்தை மகாபாரதத்தில் உணர்ந்த அதே கண்ணன்தான் நரகாசுரனை வதம் செய்து மக்களைக் காத்தார். நரகாசுரன் ஒழிக்கப்பட்ட நாளே தீபாவளியாக மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த நன்னாளில் ஆன்லைன் சூதாட்டம் என்னும் அசுரனை ஒழிக்கும் மகிழ்ச்சியான செய்தி தீபாவளியை மேலும் தித்திப்பாக்குகிறது. தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் இதில் மிகவும் அவசியம். சுய கட்டுப்பாடு என்னும் ஆயுதத்தைக் கொண்டு ஆன்லைன் சூதாட்டம் என்னும் அசுரனை ஒழித்தால் தமிழர்கள் வாழ்க்கையிலும் வெளிச்சம் பிறக்கும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு