சினிமா
தொடர்கள்
Published:Updated:

இதுவா உங்கள் சமூகநீதி?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

‘அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் இடங்களை நிரப்புவோம். மேலும், இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்' என்பதுதான் தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி.

ஆனால், இப்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை, இளைஞர்களின் ‘அரசு வேலை' என்ற கனவைக் கானல் நீராக்கிவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் மனிதவள சீர்திருத்தக் குழு, ‘அரசுப் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பலாமா, இந்தக் காலிப் பணியிடங்களைத் தனியார் முகமைகள் வாயிலாக நிரப்பலாமா?' என்பதைக் கண்டறியுமாம். அதோடு, ஆள் சேர்க்கும் நிறுவனங்களைப் பட்டியலிட்டு, ‘அவற்றின் மூலம் பணியிடங்களை நிரப்பலாமா' என்பது குறித்தும் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகள் கொடுக்குமாம்.

இந்தக் குழுவுக்கு அளிக்கப்பட்ட வரம்புகள், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது. ‘அரசு நியமனங்களுக்கு ஒப்பந்த முறையைப் பயன்படுத்தலாமா, தனியார் முகமைகள் மூலம் ஆட்களை எடுக்கலாமா' போன்ற கேள்விகளே தவறானவை. இப்படிச் செய்தால், இனி புதிதாக நியமிக்கப்படும் பலரும் தனியார் முகமைகளின் ஒப்பந்த ஊழியர்களாகவோ அல்லது தற்காலிக ஊழியர்களாகவோதான் இருப்பார்கள். அவர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியப் பலன்கள், ஓய்வூதியப் பலன்கள் என அனைத்துமே கேள்விக்குறியாகும். அரசுக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் ஏற்கெனவே தவிக்கும் தவிப்பு யாரும் அறியாததல்ல! இன்னொருபுறம், தமிழ்நாட்டின் தனி அடையாளமான சமூகநீதியும் காணாமல்போய்விடும். காரணம், இந்தமுறையில் ஊழியர்களைத் தேர்வு செய்யும்போது இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாது.

எதிர்க்கட்சிகளும், அரசு ஊழியர் சங்கங்களும் எழுப்பிய எதிர்ப்புக்குரல்களைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தன் போக்கை மாற்றிக் கொண்டிருக்கிறது. ‘அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது என்பதை ஆராய்வதுதான் இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாக இருக்கும். அதுமட்டுமல்ல, இந்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிய வரம்புகள் வெளியிடப்படும்' என்று அரசு அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

அரசு அலுவலகங்களின் செயல்திறன் மேம்பட வேண்டும். மாறிவரும் காலத்துக்கு ஏற்ப அரசு அலுவலர்களின் செயல்பாடுகள் மேம்பட, அவர்களுக்குத் தொடர் பயிற்சிகள் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழல், சிவப்பு நாடா, அலட்சியம் ஆகியவை களையப்பட்டு, அரசு ஊழியர்களிடம் ஒரு தொழில்முறை அணுகுமுறை ஏற்பட தமிழ்நாடு அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான தீர்வு என்பது, அரசு அலுவலகங்களையே தனியாருக்குக் குத்தகை விடுவது அல்ல.

நீர்வளங்களையும், இயற்கைவளங்களையும் பாதுகாக்கப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் என சுமார் 2 லட்சம் பணியிடங்களைப் புதிதாக உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஏற்கெனவே இருக்கும் நிரந்தரப் பணியிடங்களையே ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்ப நினைக்கும் இந்த அரசாணை நிச்சயம் சமூகநீதி காக்கும் ஆணை அல்ல.