பொறியியல், தொழில்நுட்ப அறிவியல் மேம்பாட்டுக்காகவும் ஆராய்ச்சிகளுக்காகவும் நிறுவப்பட்ட உயர்கல்விபீடமான அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றிச் சுழலும் சர்ச்சைகள் அனைவருக்கும் கவலையளிக்கின்றன.

கொரோனா காரணமாக அரியர் மாணவர்களைத் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது முதல், பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரம் வரை தமிழக அரசுக்கும், துணைவேந்தருக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் அதிகரித்துவருகின்றன.

‘அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளித்தால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும், மாநில அரசின் நிர்வாக உரிமை பாதிக்கப்படும்’ என்றெல்லாம் தமிழக அரசின் சார்பில் அச்சங்கள் முன்வைக்கப்பட்டன.ஆனால் ‘தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு எந்தவகையிலும் பாதிக்கப்படாது’ என்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது. மேலும், ‘அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிப்பதன் மூலம் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளின் தரம் மேம்படும்’ என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்ட கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேநேரத்தில் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக, உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது பலத்த விவாதங்களைக் கிளப்பியது.

இச்சூழலில், பணி நியமனம், பணி உயர்வு, உபகரணங்கள் கொள்முதல் போன்றவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மகளையே பல்கலைக்கழகப் பணியில் நியமனம் செய்திருப்பதாகவும் துணைவேந்தர் சூரப்பாமீது புகார்கள் கிளம்பியுள்ளன. இதுபற்றி விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்திருக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு அதில் உண்மைகள் இருக்கும்பட்சத்தில் சூரப்பாமீதும் இதில் தொடர்புடைய அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் தமிழக அரசுக்கும் சூரப்பாவுக்கும் உள்ள ஈகோ மோதல்களுக்குப் பழிவாங்கும் களமாக இந்த விசாரணை அமைந்துவிடக்கூடாது என்பது மிக முக்கியம்.

சமீப காலங்களில் தமிழகத்தில் உருவாகும் பொறியாளர்கள், தகுந்த திறனோடு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொழில் நிறுவனங்கள் மத்தியில் இருக்கிறது. 2019 தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 10-ம் இடத்திலிருந்து 14-ம் இடத்துக்குப் பின்தங்கியது. ‘தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனரே தவிர, பொறியியல் நிபுணர்கள் உருவாவதில்லை’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை சமீபத்தில் வேதனையுடன் சுட்டிக்காட்டியிருந்தது.

தமிழகத்தில் பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தமிழக அரசும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரும் போட்டிபோட வேண்டுமே தவிர, தங்களுக்குள் ஈகோ யுத்தம் நடத்தி பாரம்பர்ய கல்வி நிறுவனத்தைப் பாழ்படுத்திவிடக்கூடாது.