பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டும் நிதின் காமத்!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

இன்றைக்கு இந்தியப் பங்குச் சந்தை உலகில் அனைவராலும் உற்றுக் கவனிக்கப்படும் இடத்தைப் பெற்றிருக்கிறார் ‘ஜிரோதா’ (zerodha) நிறுவனத்தின் நிறுவனர் நிதின் காமத். இன்றைய இளைஞர்கள் கோடீஸ்வரர்களாக மாற அவர் சொல்லியிருக்கும் யோசனைகளை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடக்க முற்பட வேண்டும்.

இன்றைய இளைஞர்களுக்கு ஐந்து முக்கியமான ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார் நிதின் காமத். 1. பாக்கெட் மணியை சேமிக்கத் தொடங்குங்கள்; 2. பொருள்களில் அல்ல, அனுபவங்களில் முதலீடு செய்யுங்கள்; 3. இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்; 4. கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்; 5. சிறப்பான திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள் ஆகியவையே நிதின் சொன்ன அந்த 5 ஆலோசனைகள்.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், நுகர்வுக் கலாசாரத்தில் அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மாதம் 25,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேருகிறவர்கள், வேலைக்குச் சேர்ந்த உடனேயே ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போனை கடனில் வாங்கி விடுகிறார்கள். அந்தக் கடன் அடைபட்ட உடனேயே, ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள மோட்டார் பைக்கைக் கடனில் வாங்குகிறார்கள். அந்தக் கடனைத் திரும்பச் செலுத்திய உடனேயே ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை வாங்குகிறார்கள். இப்படி ஓராண்டு, ஈராண்டுக்கான சம்பளம் முழுக்க பொருள்களை வாங்க செலவு செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

நாளைக்கு அவசரமாக ஒரு செலவு வந்தால், அதை எப்படி சமாளிப்போம்; திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டால், அவர்களுக்கான கல்விச் செலவை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம், கண்மூடி கண் திறப்பதற்குள் நமக்கு வயதாகி, ஓய்வுக்காலம் வந்துவிடுமே, அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற கவலையெல்லாம் இல்லாமலே இருக்கின்றனர் பெரும்பாலான இளைஞர்கள்.

இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டும் நிதின் காமத்!

‘சம்பாதி, அனுபவி’ என்பது அமெரிக்கக் கலாசாரம். சம்பாதிப்பதில் ஒரு பகுதியை கட்டாயம் சேமிப்பது இந்தியக் கலாசாரம். சிக்கனத்தை வலியுறுத்தும் இந்தக் கலாசாரம்தான் நம்மை பல கஷ்டங்களில் இருந்து காக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து, நிதின் காமத் காட்டிய வழியில் நடக்கத் தொடங்குவதுதான் புத்திசாலித்தனம்! அவருடைய ஐந்து யோசனைகளை சரியாகப் புரிந்துகொண்டு சேமிப்பும், முதலீடும் செய்யத் தொடங்கினால், எதிர்காலத்தில் எந்தப் பணக்கஷ்டம் வந்தாலும் அதை எளிதில் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இன்றைய இளைஞர்கள் இருப்பார்கள்.

இந்த நல்ல ஆலோசனைகளை இளைஞர்களுக்குப் புரியும்படியாகவும், அவர்கள் விரும்பும்படியாகவும் எப்படிக் கொண்டுபோய் சேர்ப்பது என்பதுதான் இன்றைக்கு நம்முன் உள்ள மிகப் பெரிய சவால். இதற்கான சரியான தீர்வை உருவாக்க, நிதித்துறை சார்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளுடன் கலந்துபேசி சரியான கல்வித் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவது மிகமிக அவசியம்.