கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

அலட்சியம் எனும் புற்றுநோய்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

`நான் சீக்கிரமாவே ரெடியாயிட்டு கம்பேக் கொடுப்பேன். எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க. மாஸ் என்ட்ரி கொடுப்பேன்'. வாட்ஸப்பில் இப்படி ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார், மாவட்ட அளவிலும் தேசிய அளவிலும் பல போட்டிகளில் விளையாடிய கால்பந்து வீராங்கனை பிரியா.

விளையாட்டின்போது தனக்கு ஏற்பட்ட மூட்டு தசைப் பிரச்னையில் இருந்து மீள, அவர் சென்னை கொளத்தூரில் இருக்கும் பெரியார் அரசு மருத்துவமனையில் ஒரு சாதாரண அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சையின்போது பிரியாவின் காலில் போடப்பட்ட பேண்டேஜை சரியான நேரத்தில் அகற்றத் தவறியதால், அவரது காலையே அகற்ற வேண்டிய கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டார். இடிபோன்று இறங்கிய இந்தச் செய்தியையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், ‘காலை நீக்கியும் பலனில்லை. உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாகப் பாதிக்கப்பட்டு பிரியா இறந்துவிட்டார்' என்று செய்தி, பிரியாவின் பெற்றோரையும் நண்பர்களையும் மட்டுமல்ல... ஒட்டுமொத்தத் தமிழக மக்களையும் உலுக்கியிருக்கிறது.

அரசு மருத்துவமனையின் மீதும், மருத்துவர்கள் மீதும், மருத்துவக் கட்டமைப்பின் மீதும் பிரியா வைத்திருந்த நம்பிக்கையைப் பொய்யாக்கியது யார்? சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவும் அலட்சியமும் மட்டும்தான் பிரியா மரணத்துக்குக் காரணமா?

மருத்துவ வசதியில் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் இருந்திருந்தால் மக்களின் மனங்களில் இத்தனை கேள்விகள் எழாது. ஆனால், நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவர்களும் இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். வெளிமாநிலங்களிலிருந்து சிகிச்சைக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் உயர் சிகிச்சைக்காக நம் நாட்டுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. பல மருத்துவக் குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பது நம் மாநிலம்தான். ‘மக்களைத் தேடி மருத்துவம்', ‘இன்னுயிர் காப்போம் திட்டம்' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதும் இங்குதான்.

அதே சமயத்தில், அரசு மருத்துவமனைகள் என்றாலே அலட்சியம் தலைவிரித்தாடும் என்று அஞ்சி சாதாரண மக்கள்கூட பணத்தை உறிஞ்சும் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலைமையும் இங்குதான் இருக்கிறது. அரசு மருத்துவமனைகள்மீது மக்களுக்கு இருக்கும் இப்படிப்பட்ட அவநம்பிக்கையை, பிரியாவின் மரணம் போன்ற வேதனை நிகழ்வுகள் இன்னும் அதிகப்படுத்திவிடும்.

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, காலத்திற்கு ஏற்ற புதிய வழிமுறைகளை வகுப்பதும், இதுபோன்ற தவறுகள் நிகழாதபடி கண்காணிப்பு நடைமுறைகளை ஏற்படுத்துவதும் அவசியம். பிரியாவின் மரணத்திற்குக் காரணமான டாக்டர்கள்மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் கடமையை உணர்ந்து செயல்படும் மற்ற அரசு மருத்துவர்களின் உணர்வுகளைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும்.

அலட்சியம் எனும் புற்றுநோயைச் சரியான அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். அதன்மூலம் அரசு மருத்துவமனைகள்மீதான நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டியது அரசின் பொறுப்பு.