தொடர்கள்
சினிமா
Published:Updated:

தீவிரவாத சக்திகள் தலைதூக்கக்கூடாது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தீபாவளிக்கு முன்தினம் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தமிழகத்தைக் கவலையுற வைத்திருக்கிறது. கால் நூற்றாண்டுக்கு முன்பு, கோவையில் கேட்ட ஒரு கொடிய சத்தத்தை இது நினைவுபடுத்தியது.

வெடித்த காரோடு எரிந்துபோன ஜமேஷா முபின் வீட்டில், வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 75 கிலோ வேதிப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன என்பதும், சர்வதேச பயங்கரவாத அமைப்பின் அனுதாபியான அவர் ஏற்கெனவே 2019-ம் ஆண்டே தேசியப் புலனாய்வு முகமையின் கண்காணிப்பில் இருந்தவர் என்று வெளியான தகவலும் நிலைமையின் தீவிரத்தைக் கூட்டின. அவரோடு தொடர்பில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்திருக்கிறது. கோவையில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையில் சிறப்புப் படையை உருவாக்கிடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜமேஷா முபின் எடுத்துச் சென்ற அந்தக் கார் எதனால் வெடித்தது, அது உண்மையில் சிலிண்டர் வெடி விபத்துதானா, அவர் தாக்குதல் திட்டங்கள் ஏதேனும் வைத்திருந்தாரா என்பது பற்றித் தமிழகக் காவல்துறை தெளிவாக எதையும் விளக்காதது, பலரும் பலவிதமாக யூகங்கள் செய்துகொள்ள வழிவகுத்தது. வழக்கு விசாரணை குறித்த ரகசியங்களை வெளியில் சொல்வது கூடாது என்றாலும், மக்களின் அச்சத்தைப் போக்கவும் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் தேவையான உண்மைகளைச் சொல்ல வேண்டியது காவல் துறையின் கடமை.

இந்த நிலையில் தமிழகக் காவல்துறையின் நடவடிக்கையைப் பாராட்டியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, `இந்த வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க ஏன் நான்கு நாள் எடுத்துக்கொண்டீர்கள்' என்று கோவையில் தான் கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இதேபோல, `ஜமேஷா முபின் பற்றிய தகவல்களைக் காவல் துறையின் தனிப்பிரிவுத் தலைமைக்கு அளித்திருந்தும், அதைக் காவல்துறை கோட்டை விட்டுவிட்டது' என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிரங்கமாகக் குற்றம் சுமத்திவருகிறார். `சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளில் இருந்தே தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அத்தனை பேரும் மாநிலக் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சம்பவ இடத்தில் தடயங்களை ஆய்வு செய்தார்கள்' என்றும், `மத்திய உள்துறையில் இருந்து வந்தது வழக்கமான சுற்றறிக்கை. அதில் கோவை குறித்தோ அல்லது ஜமேஷா முபின் குறித்தோ குறிப்பாக எதுவும் இல்லை' என்றும் காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது. யாரும் யாரையும் குற்றம் சாட்டுவதற்கான நேரமும் சம்பவமும் இது அல்ல என்பதைப் புரிந்துகொண்டு சம்பந்தப்பட்டவர்கள் நடக்க வேண்டும்.

இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று ஒதுங்கி நிற்காமல், கோவையில் மட்டுமன்றி தமிழ்நாட்டில் எங்குமே தீவிரவாத சக்திகள் தலைதூக்காத வண்ணம் விழிப்புடன் செயல்பட வேண்டியது தமிழக அரசின் கடமை.