Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

கடந்த சில மாதங்களுக்கு முன் ஐ.நா வெளியிட்ட அறிக்கை, கடந்த 50 ஆண்டுகளில் உலகிலிருந்து காணாமல்போன 142.6 மில்லியன் பெண்களில், இந்தியப் பெண்கள் 45.8 மில்லியன் என்றது.

ல்யூட் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் பற்றிப் படிக்கும்போதே, பதறித்துடிக்க வைக்கும் செய்திகளும் பாதிக்குப் பாதி வந்து நோகடிப்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

குமுதினி த்யாகி, ரிதி சிங்... இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலில் முதன்முறையாக இடம்பெற்றிருக்கும் பெண் அதிகாரிகள். போர்க்கப்பலின் தளத்தில் தங்கள் கன்ட்ரோலில் உள்ள சென்ஸார் மூலம், எதிரியின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவது முதல் அழிக்க வேண்டிய இலக்கு வரை ஹெலிகாப்டரில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்கும் போர்முனைப் பொறுப்பு.

ஷிவாங்கி சிங்... ரஃபேல் போர் விமானங்களை இயக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண். சீனாவுடனான எல்லைப் பதற்றத்துக்குப் பின், லடாக் பகுதியில் தயாராக இருக்கும் இந்திய வான் படையில், போர் விமானத்தை இயக்கவுள்ளார் ஷிவாங்கி.

வெள்ளுடையும் கம்பீரமுமாக இந்த இளம் எனர்ஜிகளை கண்கள் நிறைய கண்டுவிட்டுத் திரும்பினால், வீட்டுக்குள் இருக்கும் உலகம் சுள்ளென்று சுடுகிறது. உலகம் எவ்வளவோ முன்னேறிக் கொண்டிருக்கும் சூழலிலும், பெண் குழந்தையை விரும்பாத குடும்பங்கள்தான் பெரும்பான்மை என்பது வலியை அதிகப்படுத்துகிறது.

2016-ம் ஆண்டு ஐ.நா-வின் மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி விகிதாசார அடிப்படையில் பெண் குழந்தைகள் மிகக்குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம். அதாவது, 112 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள்தாம் இருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான அரசின் தரவொன்று நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ‘உத்தரகாண்ட் மாநிலத்தின் 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை’ என்றது அந்தத் தரவு. அந்தப் பகுதியை ‘ரெட் ஸோன்’ என்று வட்டமிட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தது அரசு.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஐ.நா வெளியிட்ட அறிக்கை, கடந்த 50 ஆண்டுகளில் உலகிலிருந்து காணாமல்போன 142.6 மில்லியன் பெண்களில், இந்தியப் பெண்கள் 45.8 மில்லியன் என்றது.

கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருப்பது கொடுமையின் உச்சம். ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆறாவதாக மனைவி கர்ப்பமுற்றிருக்க, அதுவும் பெண் குழந்தையாகிவிடுமோ என்று மனைவியுடன் சண்டையிட்ட கணவன், வயிற்றைக் கிழிக்க... ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார் மனைவி.

வாழ்வதே பெண்களுக்கு சமர் என்றாகிவிட்ட சூழலில், போர்முனையின் பொறுப்புகளை வசப்படுத்தியிருக்கும் மூன்று பெண்கள் தந்திருக்கும் நம்பிக்கையை ஏந்திக்கொண்டு முன் நகர்வோம்.

உண்மையில், வாழவே அனுமதிக்கப்படாத பெண் சிசுக்களுக்கான பாதுகாப்பில் அரசின் முன்னெடுப்புகளும், மக்களின் மனமாற்றமும் சென்றடைய வேண்டிய தூரத்தையும் பொறுப்பையும் உணர்வோம்!

நமக்குள்ளே...