Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

‘மாடர்ன் மகப்பேறு மருத்துவத்தின் தந்தை’ என்ற பெருமை தரப்பட்டவர், அமெரிக்க டாக்டர் ஜேம்ஸ் மாரியன் சிம்ஸ்.

2020 நோபல் பரிசுகளுக்கான வெற்றியாளர்களில், இதுவரை நான்கு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஜீன் எடிட்டிங்குக்காக விருது பெறுகிறார்கள் அமெரிக்க அறிவியலாளர் ஜெனிஃபர் டௌடுனா மற்றும் பிரெஞ்சு அறிவியலாளர் எமானூல் சார்பென்டர். இயற்பியலில் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெறும் மூவர் அடங்கிய குழுவில், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் அறிவியலாளர் ஆண்ட்ரியா கெஸ்ஸும் ஒருவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுகிறார், அமெரிக்கப் பெண் லூயி க்ளக்.

இந்தச் செய்தியுடன், 1901 - 2019 வரை வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 866, பெண்களின் எண்ணிக்கை 53 என்ற தகவலையும் சேர்த்துப் படிக்கும்போது, வரலாற்றில் புறந்தள்ளப்படும், மறைக்கப்படும் பெண்களின் பங்களிப்புகளும் தியாகங்களும் கேள்விகளாக எழுகின்றன. குறிப்பாக, அனார்ச்சாவின் மறைக்கப்பட்ட தியாகம்.

‘மாடர்ன் மகப்பேறு மருத்துவத்தின் தந்தை’ என்ற பெருமை தரப்பட்டவர், அமெரிக்க டாக்டர் ஜேம்ஸ் மாரியன் சிம்ஸ். அவரிடம் பிரசவத்துக்குச் சென்ற 17 வயதுக் கறுப்பின அடிமைப் பெண் அனார்ச்சாவுக்குக் குழந்தை இறந்து பிறக்க, அதற்குப் பின்னான ஆறாத பிரசவக் காயங்களுக்கு மீண்டும் சிம்ஸிடம் சிகிச்சைக்குச் சென்றார். கேள்வி கேட்கக் குரலற்ற அந்த ஒடுக்கப்பட்ட பெண்ணின் உடலை, தன் மகப்பேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார் சிம்ஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1846-1849 வரையிலான ஆண்டுகளில், மயக்க மருந்து கொடுக்காமல் அனார்ச்சாவுக்கு 30 அறுவை சிகிச்சைகளைச் செய்துபார்த்தார் சிம்ஸ் (அனைத்துமே தோல்வியில் முடிந்தது தனிக்கதை). அதேநேரம் தான் சிகிச்சையளித்த வெள்ளையினப் பெண்களுக்கு மயக்கமருந்து உள்ளிட்ட உயர் பாதுகாப்பு சிகிச்சையையே அவர் வழங்கினார். ‘கறுப்பினப் பெண்களுக்கு வலி தெரியாது’ என்ற இனவெறித் திமிரின் மீது அமர்ந்து நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சிகளுக்கு, அனார்ச்சாவுடன் சேர்த்து, பெட்ஸி, லூஸி உள்ளிட்ட 10 கறுப்பினப் பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். இந்த மூவரை தவிர, அந்த ஏழு பெண்களின் பெயர்கள்கூட வரலாற்றுப் பதிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.

தன் ஆணையின்படி இந்தப் பெண்களைத் தங்கள் உடலைக் கிடத்த வைத்து பயன்படுத்திக் கொண்ட சிம்ஸுக்கு, அதற்கு இந்த அடிமைப் பெண்களின் சம்மதம் எதுவும் தேவைப்படவில்லை. ‘மாடர்ன் கைனகாலஜியின் தந்தை’ என அவர் பெயர் வரலாற்றில் இடம்பெற்றுவிட, ‘மகப்பேறு மருத்துவத்தின் உண்மையான தாய் அனார்ச்சா உள்ளிட்ட இந்த 10 கறுப்பினப் பெண்களே’ என்ற எதிர்க்குரல்கள், ஏட்டுப் பதிவுகளில் இடமில்லாமல் காற்றில் கலந்து நிற்கின்றன.

சென்ற நூற்றாண்டில் சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த நூற்றாண்டில் ஆராய்ச்சியாளர்களாக விருது பெறுவதுவரை பெண் இனத்தின் காலப் பயணம், `ஆணின் வெற்றியைவிட பெண்ணின் வெற்றிக்கு ஏன் எப்போதும் மதிப்பு கூடுகிறது?' என்ற கேள்விக்கான பதிலை நமக்கு உணர்த்துகிறது.

நமக்குள்ளே...