சினிமா
Published:Updated:

கவர்ச்சியான அறிவிப்புகளும் ஆசை வார்த்தைகளும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

`உழைத்துச் சம்பாதித்துக் குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும். மற்றவர் முன்பு கெளரவமாக வாழ வேண்டும்' என்பது இளைஞர்களின் மிக நியாயமான கனவு. சிலருக்கோ அதைத் தாண்டி, ‘குறுகிய காலத்துக்குள் எப்படியாவது நிறைய சம்பாதித்துவிட வேண்டும்’ என்ற ஆசை இருக்கிறது. அதனால் முட்டி மோதி எல்லா வழிகளையும் தேடிப் பார்க்கிறார்கள். குறுக்கு வழிகளைக் காட்டி மாயவலை விரிக்கும் மனிதர்களின் கரங்களில் இவர்கள்தான் சிக்குகிறார்கள். அயல்நாட்டு வேலை வாங்கிக் கொடுப்பதாக மோசடி செய்யும் போலி நிறுவனங்களின் மூலதனமாக இவர்களின் இந்த ஆசைதான் இருக்கிறது.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அரங்கேறிவரும் இந்தக் கொடுமையின் அடுத்த அத்தியாயம், இப்போது மியான்மரில் நடந்துள்ளது. பெரும்பாலும் இப்படிப்பட்ட மோசடிகளில் அதிகம் படிக்காத, அடித்தட்டுத் தொழிலாளர்களே சிக்குவார்கள். இம்முறை ஏமாற்றப்பட்டிருப்பது ஐ.டி இளைஞர்கள். ‘எதையும் செய்வதற்கு, அதைப் பற்றிய அவசியமான மற்றும் போதுமான தகவல்கள் தேவை’ என்பதே இன்ஜினீயரிங்கின் அடிப்படை. ‘எப்படியாவது வெளிநாட்டு வேலைக்குப் போய்விட வேண்டும்’ என்ற அவசரமும் ஆசையும் இவர்களை அப்படி யோசிக்க விடாமல் கண்களை மறைத்திருக்கலாம்.

`தாய்லாந்தில் ஐ.டி வேலை' என்று அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள், சட்டவிரோதமாக மியான்மர் நாட்டுக்குக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். ஆன்லைன் மோசடி மூலம் பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலையைச் செய்யுமாறு துப்பாக்கியைக் காட்டியும், உடலில் மின்சாரம் செலுத்திச் சித்திரவதை செய்தும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் உட்பட இந்தியாவிலிருந்து சுமார் 300 பேர் மியான்மரில் இப்போது இப்படிப் பிணைக் கைதிகளாகச் சிறைப்பட்டிருக்கிறார்கள். ஐந்து லட்ச ரூபாய் பிணைத்தொகை கொடுத்துவிட்டு, இந்த மோசடிக் கும்பலிடமிருந்து தமிழ்நாட்டுக்கு மீண்டு வந்திருக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர், அங்கே நடக்கும் கொடுமைகளைக் கூறக் கேட்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

தலையங்கம்
தலையங்கம்

அதற்கு முன்பாக மியான்மரில் இந்த மோசடிக் கூட்டத்திடம் சிக்கித் தவிக்கும் கடலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து, பல அரசியல் தலைவர்களின் கவனம் இந்தப் பிரச்னையின் பக்கம் திரும்பியது. சிறைப்பட்டிருக்கும் நம் மாநில இளைஞர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான பயணச் செலவைத் தமிழக அரசே ஏற்க முன்வந்திருக்கிறது. மியான்மரில் உள்ள இந்தியத் தூதரகம் 30 பேரை மீட்டுவிட்டதாகவும், மீதம் இருப்பவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் நம்பிக்கை தந்திருக்கிறது.

`வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கு முன்னர், வேலை தரும் நிறுவனம் மற்றும் வேலை வாங்கித் தரும் நிறுவனம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை, கடந்தகாலச் செயல்பாடு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்த அல்லது வேலை செய்யும் ஊழியர்களின் அனுபவங்கள் ஆகியவற்றை இந்த டெக்னாலஜி யுகத்தில் தெரிந்து கொள்வது சிரமமில்லை. இந்திய அரசின் வெளியுறவுத்துறை, தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் ஆகியவற்றின் இணையதளங்களிலும் பயனுள்ள வழிகாட்டுதல்கள் இருக்கின்றன.

இருந்தாலும், கவர்ச்சியான அறிவிப்புகளும் ஆசை வார்த்தைகளும் வேலை தேடும் இளைஞர்கள் சிலரின் கண்களை மறைத்துவிடுகின்றன. மோசடிகளில் ஈடுபடும் இடைத்தரகர்கள்மீது அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை தேடிச் செல்லும் இளைஞர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.