Published:Updated:

ஆபத்தானவையே!

பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை வணக்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ஆபத்தானவையே!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

Published:Updated:
பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை வணக்கம்

‘ஊரான் ஊரான் தோட்டத்துல

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்’

- இது, அன்றைக்கு இங்கிலாந்தில் அமர்ந்துகொண்டு நம்மை வெள்ளையர்கள் ஆட்டிவைத்த காலத்தில், தாங்கள் கொத்தடிமைகளாக மாற்றிவைக்கப்பட்டிருக்கும் கொடுமையை வெளிப்படுத்துவதற்காக நம் விவசாயிகள் பாடிய வேதனைப் பாடல்.

விடுதலை பெற்று 75 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலிலும் அந்தக் கொடுமையும், அது சார்ந்த வலியும் தொடரத்தான் செய்கின்றன. அன்றைக்கு அங்கிருந்தபடி கடிதம் போட்டவர்கள், சுதந்திரத்துக்குப் பிறகு டெல்லி காங்கிரஸ் ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, தாங்கள் நினைத்தவற்றையெல்லாம் அரசாங்க உத்தரவாகவே போடவைத்தார்கள். ‘மாற்றத்துக்கான நாயகன்’ என்று கொண்டாடப்படும் பி.ஜே.பி-யின் நரேந்திர மோடி காலத்திலும் ‘விவசாயக் கொடுமைகள்’ மாறவில்லை. ஒருபக்கம் ‘தற்சார்பு’ என்பதைப் பேசிக்கொண்டே, மறுபக்கம் கார்ப்பரேட்டுகளின் கட்டளைகளுக்கு விவசாயிகள் கட்டுண்டு கிடக்க வேண்டிய சூழலை மேலும் அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது பி.ஜே.பி அரசு.

‘விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் இரட்டிப்பாக்குவேன்’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்கும் மோடி, இடைத்தரகர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் வருமானத்தை இந்த ஆண்டே இருமடங்காக்கும் வகையில் அவசர அவசரமாக மூன்று சட்டங்களைப் பலத்த எதிர்ப்புக்கு நடுவேயும் நிறைவேற்றியிருப்பது நாடு முழுக்க விவசாயிகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

‘‘வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாய ஒப்பந்தச் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் அவசரச் சட்டம்’’ ஆகிய இந்த மூன்று சட்டங்களும் இடைத்தரகர்கள் மற்றும் கார்ப்பரேட் வியாபாரிகள் இதுநாள் வரை செய்து வந்த பதுக்கல் உள்ளிட்ட அனைத்தையும் இனி சட்டபூர்வமாக்கிவிடும். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இருக்காது. மூன்று சட்டங்களுமே ‘இந்தியாவின் முதுகெலும்பு’ என்று வர்ணிக்கப்படும் விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் வகையில்தான் அதிரடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளன’’ என்று நாடு முழுக்க விவசாயிகள் கொந்தளித்துக் கொண்டுள்ளனர்.

உண்மைதான்... ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்’ என்று முழங்கிக் கொண்டிருக்கும் மோடி, முதலில் கையில் எடுத்திருக்க வேண்டியது 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூங்கிக்கொண்டிருக்கும் வேளாண் கமிஷன் அறிக்கையைத்தான். மத்திய அரசால், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த கமிஷன், ‘விளைபொருளுக்கு அதன் உற்பத்திச் செலவுடன், அந்தச் செலவில் குறைந்தபட்சம் 50 சதவிகித தொகையையும் சேர்த்து விலையாகக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்பது உட்படப் பல்வேறு நியாயமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘வேளாண் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள்’ என்று காங்கிரஸ் காலத்தில் ஒலிக்க ஆரம்பித்த விவசாயிகளின் கதறல், கடந்த ஆறு ஆண்டுகளாகப் பி.ஜே.பி-யின் காலத்திலும் துளிகூடச் சத்தம் குறையாமல் ஒலித்தபடியே இருக்கிறது. ஆனால், காதுகளை இறுகப் பொத்திக்கொண்டிருந்துவிட்டு, இடைத்தரகர்கள் மற்றும் கார்ப்பரேட் வியாபாரிகளுக்குச் சாதகமான சட்டங்களைத் தூக்கிப் பிடிப்பதில் துடியாகத் துடிக்கிறார் மோடி. ‘இந்திய விவசாயிகளின் வாழ்க்கையில் இணையற்ற சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளோம்’ என்று தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்துக்கொள்கிறார்.

‘நான் ஒரு விவசாயி’ என்று எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கும் ‘முன்னாள் நாட்டுச் சர்க்கரை வியாபாரி’, இந்நாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்த மூன்று சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆபத்தில்லை’ என்று திருவாய் மலர்ந்துள்ளார். உண்மையில், விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலில் வரக்கூடியது. விவசாயிகளுக்குப் பாதகம் வருகிறது என்பதற்காகக்கூட அல்ல, மாநில அரசின் அதிகாரம் பறிபோகிறதே என்பதற்காகவாவது எதிர்க்குரல் கொடுக்கலாம். ஆனால், ‘எங்கள் பதவிக்குப் பங்கம் வராமலிருந்தால் போதும்’ என்கிற மனப்பான்மையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் பழனிசாமி.

இப்படிப்பட்டவர்களை நம்பிக்கொண்டிருந்தால், இந்த நாடும் நாட்டின் விவசாயமும் நாசமாகப்போவதை யாராலும் தடுக்கவே முடியாது என்பதே உண்மை.

‘நீங்கள் அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டு ஒரு பூதத்தை உருவாக்கிக்கொண்டுள்ளீர்கள். அந்தப் பூதம் ஒருநாள் உங்களையே காவு வாங்கப்போகிறது.’

- மூன்று சட்டங்கள் மீதான விவாதத்தின்போது மேற்கு வங்க மாநில நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, அடிவயிற்றிலிருந்து பொங்கிய வார்த்தைகள் இவை.

ஆம், பூதங்கள் எப்போதுமே ஆபத்தானவையே!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism