பிரீமியம் ஸ்டோரி

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பத்து மாதங்களைத் தாண்டி விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஆங்காங்கே வன்முறையில் முடிவது வேதனை தருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற சம்பவம், தேசத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.

லக்கிம்பூர் கேரி பகுதியில் போராடிவரும் விவசாயிகள், அந்தப் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கறுப்புக் கொடி காட்டிய விவசாயிகள்மீது, பா.ஜ.க-வினர் வந்த அணிவகுப்பில் இருந்த ஒரு கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் ஆத்திரமடைந்து, அந்தக் காரில் இருந்த நான்கு பேரையும் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். ‘அந்தக் கார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமானது. காரை ஓட்டியது அமைச்சரின் மகன்தான்’ என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ‘நானோ, என் மகனோ சம்பவ இடத்திலேயே இல்லை’ என அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்திருக்கிறார்.

துணைமுதல்வர் வருகைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது தெரிந்திருந்தும், போலீஸார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதே இந்தச் சம்பவங்களுக்குக் காரணம். போராட்டங்கள் வன்முறைப் பாதைக்குப் போவதையும், போராடும் எவர்மீதும் வன்முறையை பிரயோகிப்பதையும் ஏற்க முடியாது.

நீண்ட காலமாகப் போராடிவரும் விவசாயிகளைப் பக்குவமாக எதிர்கொள்ள அரசு தவறி வருகிறது. ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, ‘தடுப்புகளைத் தாண்டி விவசாயிகள் வந்தால், லத்தியால் அடித்து அவர்களின் மண்டையை உடையுங்கள்’ என்று துணை கலெக்டர் ஆயுஷ் சின்ஹா உத்தரவிட்டது சர்ச்சையானது. அந்தப் போராட்டத்தில் பல விவசாயிகளின் மண்டைகள் உடைக்கப்பட்டன. ‘அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானவை என்றாலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அவர் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம்தானே’ என்று துணை கலெக்டரின் செயலை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நியாயப்படுத்தினார்.

தலையங்கம்
தலையங்கம்

இந்நிலையில் பா.ஜ.க விவசாயிகள் அணி கூட்டம் ஒன்றில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியதாக வெளியாகியுள்ள வீடியோ இன்னும் அதிர்ச்சி தருகிறது. ‘`ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 முதல் 700 பேர் கொண்ட குழுக்களை உருவாக்குங்கள். போராடும் விவசாயிகளுக்குப் பதிலடி கொடுங்கள். உருட்டுக்கட்டைகளைக் கையில் எடுங்கள். சில மாதங்கள் சிறையில் இருந்தால், பெரிய தலைவராக வெளியில் வருவீர்கள்’’ என்று பேசியிருக்கிறார். ‘அவர் பேசியதில் சில பகுதிகளை மட்டும் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அது தவறாக அர்த்தம் புரிந்துகொள்ளப்படுகிறது’ என்று அதிகாரிகள் சொன்னாலும், ‘முதல்வர் அப்படிப் பேசவில்லை’ என மறுக்கவில்லை.

நீதிமன்றத்தின் சமரசத்தின் பேரில், இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், போராட்டம் நீடிப்பது யாருக்குமே நன்மை தராது. பேசித் தீர்க்க முடியாத பிரச்னை எதுவுமே இல்லை. அரசும் விவசாயிகளும் இறங்கிவந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை இருதரப்பும் எந்தச் சூழலிலும் வன்முறையை நாடக்கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு