பிரீமியம் ஸ்டோரி

தேசத்தையே அதிர்ச்சியடையச் செய்த சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த கோரம். பா.ஜ.க பிரமுகர்கள் அந்தப் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கறுப்புக்கொடிப் பேரணி நடத்தினர். அதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமான கார் மோதியதில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் உடனடியாக ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்த உத்தரப் பிரதேச போலீஸார், ஆஷிஷ் மிஸ்ரா தவிர மற்றவர்களைக் கைது செய்தனர். ‘ஏன் இப்படிப் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? ஒரே குற்றச்செயலில் தொடர்புடைய மற்றவர்களைக் கைதுசெய்துவிட்டு, இவரை மட்டும் விட்டுவைத்தது ஏன்?’ என்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பிய பிறகே ஆஷிஷ் மிஸ்ராவை விசாரணைக்கு அழைத்து, அவரைக் கைது செய்தனர். ‘அந்தக் காரை நான் ஓட்டவில்லை’ என்று ஆதாரங்களுடன் ஆஷிஷ் மிஸ்ராவால் மறுக்க முடியவில்லை. இன்னொரு பக்கம், அங்கு போராடிவரும் விவசாயிகளை சமீபத்தில்தான் கடுமையான தொனியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அச்சுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது இன்னொரு சம்பவம். கடலூர் எம்.பி-யாக இருப்பவர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். பண்ருட்டி பகுதியில் இவருக்குச் சொந்தமான முந்திரித் தொழிற்சாலை செயல்படுகிறது. இதில் பணிபுரியும் ஊழியரான கோவிந்தராசு என்பவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு எழுந்தபோது எம்.பி-யும் இன்னும் சிலரும் சேர்ந்து அவரை அடித்துக் கொன்றுவிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

இந்த வழக்கில் மற்ற ஐந்து பேரைக் கைதுசெய்த போலீஸார், ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி-யைக் கடைசிவரை கைது செய்யவில்லை. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பிறகு அவர் தானாகவே சென்று நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.

தலையங்கம்
தலையங்கம்

மக்கள் பிரதிநிதிகளும் சரி, அவர்களின் குடும்பத்தினரும் சரி, சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாகவே தங்களைக் கருதுகிறார்கள். தங்களை எதிர்ப்பவர்களையோ, தங்களுக்குப் பிடிக்காதவர்களையோ விசாரணை செய்யும் போலீஸாகவும், தண்டனை வழங்கும் நீதிபதிகளாகவும் நடந்துகொள்கிறார்கள். பிரச்னை பெரிதாகி வழக்கில் சிக்கினாலும், முடிந்தவரை அதைத் தாமதப்படுத்துகிறார்கள். தங்கள் ஆட்சி அமையும்போது சுலபமாக அதிலிருந்து வெளியில் வந்துவிடுகிறார்கள்.

இந்தியா முழுக்க முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகள் 4,400-க்கும் மேல் நிலுவையில் இருப்பதை அறிந்து அதிர்ந்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்குகளுக்காகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. வழக்கு நடைமுறைகளைக் கடுமையாக்கியது என்றாலும், குற்றங்கள் குறையவில்லை என்பது வேதனை.

உத்தரப்பிரதேச விவகாரம் இவ்வளவு பெரிய சர்ச்சையான பிறகும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது குறைந்தபட்ச நடவடிக்கைகூட இல்லை. கடலூர் எம்.பி-யான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் குறைந்தபட்சம் கட்சியிலிருந்து சஸ்பெண்டுகூட செய்யப்படவில்லை. பா.ஜ.க-வும் தி.மு.க-வும் இதைச் செய்தால்தான், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மக்கள் நம்புவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு